>> Monday, May 10, 2010





அணு விபத்து இழப்பீடு: மசோதா தாக்கல்



அணு விபத்து ஏற்பட்டால், இழப்பீடு வழங்க வகை செய்யும் சர்ச்சைக்குரிய மசோதா, எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே இந்திய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதி நாளில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மசோதா சட்டவிரோதமானது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி பாஜக, அதிமுக, இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தன.

இந்தியா – அமெரிக்கா இடையிலான சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டுவர இந்த மசோதாவை நிறைவேற்றுவது முக்கியமானது. அதனால், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, பிரதமர் அலுவலகத்துக்கான அமைச்சர் பிரிதிவிராஜ் செளஹான் அந்த மசோதாவைத் தாக்கல் செய்தார்.

அணுசக்தி ஒப்பந்தத்தின்படி அமைக்கப்படும் அணுமின் நிலையங்களில் விபத்து ஏற்படும்போது, அந்த ஆலையை அமைத்துள்ள வெளிநாட்டு நிறுவனம் அதிகபட்சமாக 500 கோடி ரூபாய் வரை இழப்பீடு வழங்க அந்த மசோதா வகை செய்கிறது.

ஆனால், எதிர்க்கட்சிகள் இந்த வரைமுறையை கடுமையாக எதிர்க்கின்றன. உயிருக்கு உத்தரவாதம் அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 21-க்கு இந்த மசோதா எதிரானது என்றும், பாதிக்கப்பட்டவர்கள் கூடுதல் இழப்பீடு கோரி நீதிமன்றத்தை நாடும் வாய்ப்பையும் அந்த மசோதா மறுப்பதாகவும் எதிர்க்கட்சியினர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

மசோதாவை அறிமுக நிலையிலேயே எதிர்க்கும் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை முறையானது அல்ல என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆட்சேபம் தெரிவித்தார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter