>> Monday, May 3, 2010


வாழ்வாதாரத்துக்கு சிரமப்படும் பெண்களில் இவரும் ஒருவர்

இலங்கையின் கிழக்கில் 50,000 விதவைகள்



இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் மட்டும் சுமார் 50,000 விதவைகள் இருப்பதாக இலங்கை அரசின் மகளிர் மற்றும் சிறார்கள் நலத்துறையின் துணை அமைச்சரான ஹிஸ்புல்லா தமிழோசையிடம் தெரிவித்தார்.

ஹிஸ்புல்லா பேட்டி

அந்த எண்ணிக்கையிலும் நாற்பது சதவீதமானவர்கள் நாட்டில் இடம் பெற்ற உள்நாட்டு போரின் காரணமாக கணவனை இழந்தவர்கள் என்றும் அவர் கூறுகிறார்.

இப்படியான பெண்கள் மிகவும் பலவீனமான நிலையிலும், அடிப்படை வாழ்வாதாரங்களை எதிர்நோகியுள்ள நிலையிலும் அவர்களுக்கான உதவிகள் உடனடியாக தேவை என்கிற கருத்துக்கள் இலங்கையில் வெளியாகி வருகின்றன.

அண்மையில் இந்தியாவிலிருந்து சென்றிருந்த மகளிர் குழுவொன்று கிழக்கு மாகாணத்தில் சுற்று பயணத்தை மேற்கொண்டு அங்குள்ள விதவைகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் ஹிஸ்புல்லா கூறுகிறார்.

இந்தியா திரும்பிய அந்தக் குழுவினர் இலங்கையிலுள்ள இப்படியான பெண்மணிகளுக்கு உதவி வழங்குவது தொடர்பில் சில கருத்துக்களையும் வெளியிட்டுள்ளனர்.

உடனடி உதவியாக ஆயிரம் பேருக்கு சுயதொழில் கல்வி மற்றும் உதவிகளை வழங்க இந்தியா முன்வந்துள்ளதாகவும், இதை கொழும்பிலுள்ள இந்தியத் தூதர் உறுதி செய்துள்ளதாகவும் அமைச்சர் ஹிஸ்புல்லா தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்தியா போலவே இலங்கையிலுள்ள விதவைகளின் வாழ்க்கையினை மேம்படுத்த பல நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளிடம் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

மட்டக்களப்பில் கூடுதல் எண்ணிக்கையினர்


குடும்பத் தலைவனை இழந்த ஒரு குடும்பம்
இலங்கையின் கிழக்கு மாகாணத்திலே இருக்கின்ற விதவைகளிலே 25,000 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருப்பதாகவும் அரசின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன எனவும் அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவிக்கிறார்.

இவர்களில் 12,000 பேர் அளவிலானவர்கள் மூன்று பிள்ளைகளுக்கு தாயான நிலையில் இருக்கிறார்கள் என்றும் அரசின் கணக்கெடுப்புகள் கூறுகின்றன எனவும் இலங்கை அரசின் மகளிர் மற்றும் சிறார்கள் நலத்துறையின் துணை அமைச்சர் கூறுகிறார்.

கிழக்கு மாகாண சபைக்கு மத்திய அரசிடமிருந்து போதிய நிதியுதவிகள் கிடைக்கப் பெறாத காரணத்தாலேயே, கிழக்கு பகுதியில் போர் முடிவுக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகியும் விதவைகள் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளை முன்னர் பெரிய அளவில் முன்னெடுக்க முடியவில்லை என்றும் ஹிஸ்புல்லா கூறுகிறார்.


கிழக்கு மாகாணத்தில் இருக்கும் விதவைகளில் 40 சதவீதமானவர்கள் நாற்பது வயதுக்கும் குறைந்தவர்கள் என்பது கவலையளிக்கக் கூடிய விடயம்


அமைச்சர் ஹிஸ்புல்லா

கிழக்கு மாகாண சபையில் அண்மைக் காலம் வரை மகளிர் மற்றும் சிறார்கள் நலத்துறையின் அமைச்சராக ஹிஸ்புல்லா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணத்தைப் போலவே வடக்கு மற்றும் இதர மாகாணங்களிலும் போரினால் விதவையானவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள் எனவும் அவர் கூறுகிறார்.

தற்போது அரசால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஒரு ஆரம்பக்கட்டமே எனவும் அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவிக்கின்றார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter