>> Wednesday, May 5, 2010
லண்டன் வாழ் தமிழர்கள் (ஆவணப்படம்)
பிரிட்டிஷ் தேர்தல்: தமிழர்கள்
பிரிட்டிஷ் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் இங்கு வாழுகின்ற தமிழர்களும் இங்கிருக்கின்ற தமக்குப் பிடித்த பல்வேறு கட்சிகளுக்கான பிரச்சாரங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் தற்போதைய ஆளும் கட்சியான தொழிற்கட்சிக்கு ஆதரவாக பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடுகிறார் அந்தக் கட்சியின் தேசிய கொள்கைக் குழுவைச் சேர்ந்த சென் கந்தையா. தமது கட்சிதான் சிறுபான்மை மக்களுக்கு ஆதரவான கட்சி என்பது அவரது கருத்து.
ஆனால், தமிழர்கள் எல்லாரும் பழமை விரும்பிகள் ஆகவே அவர்களின் ஆதரவு கன்சர்வேட்டிவ் கட்சிக்குத்தான் என்று கூறுகிறார் எட்மண்டன் பகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கான வேட்பாளரின் பிரச்சார முகாமையாளரான டேவிட் ஜோசப்.
தமது கட்சியின் கொள்கைகள் அனைத்தும் ஏனைய முக்கிய கட்சிகளைப் போலல்லாது வெளிப்படைத்தன்மை மிக்கவை என்கிறார் லிபரல் டெமொகிரடிக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மேயரான யோகன் யோகநாதன்.
இங்கு இந்த தேர்தலைப் பொறுத்தவரை நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் கடன் நெருக்கடி போன்ற பிரச்சினைகள்தான் முக்கிய தேர்தல் பேசு பொருளாக பார்க்கப்படுகின்றன.
கடந்த 13 வருடமாக தொழிற்கட்சி நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து விட்டது என்கிறார் கான்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த டேவிட் ஜோசப்.
ஆனால் இதனை சென்கந்தையா மறுக்கிறார். கடன் நெருக்கடி என்பது உலகுக்கு பொதுவான பிரச்சினை என்று கூறுகின்ற அவர், தொழிற்கட்சியின் செயற்பாடுகள்தான் உண்மையில் பிரித்தானியாவை இந்த விடயத்தில் ஓரளவுக்காவது காப்பாற்றி வைத்திருக்கிறது என்று அவர் கூறுகிறார். தேவையான முதலீடுகளை தமது கட்சி சரியாக செய்திருக்கிறது என்கிறார் அவர்.
அதேவேளை, இங்கிருக்கின்ற இலங்கை மக்கள் உட்பட சிறுபான்மையினர் மத்தியில் குடிவரவு என்பது ஒரு முக்கிய பிரச்சினையாக கருதப்படுகின்றது. கான்சர்வேட்ட்டிவ் கட்சி அகதிகளின் வரத்துக்கு எதிரான கட்சி என்பது பலரது அபிப்பிராயம். ஆனால் இதனை டேவிட் மறுக்கிறார். உண்மையில் அகதிகளுக்கு ஆதரவான கட்சி தொழிற்கட்சிதான் என்கிறார் சென் கந்தையா.
குடிவரவு விடயத்தில் தமது கட்சி ஒரு சாதகமான கட்சியாகவே இருப்பதாக லிபரல் டெமொகிரடிக் கட்சியின் யோகன் யோகநாதனும் கூறுகிறார்.
லண்டனில் குடிவரவு சட்டத்தரணியாக செயற்படும் பஷீர் அவர்கள் ஒப்பீட்டளவில் தொழிற்கட்சியே குடிவரவு விடயத்தில் அகதிகளுக்கு ஆதரவான கட்சியாக செயற்படுவதாக கூறுகிறார்.
அதேவேளை வெளிநாட்டில், குறிப்பாக ஆப்கானிஸ்தானில் பிரிட்டனின் சிப்பாய்களும் போரில் ஈடுப்பட்டிருப்பதும் இங்கு ஒரு தேர்தல் பிரச்சாரத்துக்கான அம்சமாக பார்க்கப்படுகின்றது. இந்தப் போரையும், அணு ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் பணத்தையும் லிபரல் டெமொக்கிரடிக் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. ஆனால், தொழிற்கட்சி தாம் பிரிட்டனில் தாக்குதல்கள் நடப்பதைத் தவிர்ப்பதற்காகவே ஆப்கான் போரில் ஈடுபட்டுள்ளதாக கூறுகிறது.
இந்த தேர்தலில் வரப்போகின்ற முடிவுகள் இலங்கை விவ்காரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று கூறுகின்ற சிவலிங்கம் அவர்கள், ஆகவே இங்குள்ள தமிழர்கள் இங்கு உள்ளூரிலிருக்கும் பிரச்சினைகளையும் மனதில் கொண்டு தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறார். அதே விடயத்தையே பஷீர் அவர்களும் வலியுறுத்துகிறார்.
பொதுவாகவே இங்குள்ள இலங்கை தமிழர்கள் அனைவரும் இலங்கை நிலைமைகளை மனதில் கொண்டுதான் பிரிட்டிஷ் தேர்தலில் தமது வாக்குகளை போடுவார்கள் என்ற போதிலும், அவர்கள் வாக்குகள் இங்கிருக்கின்ற பெரிய கட்சிகள் மத்தியில் பகிரப்படத்தான் போகின்றன.
0 comments:
Post a Comment