>> Monday, May 10, 2010


பழங்காலத்து கதைகளில் ஆபாசம் இருப்பதாக புதிய சர்ச்சை

அலிபாபா கதையில் 'ஆபாசம்'



ஆயிரத்து ஓர் இரவுகள் என்ற பழங்காலத்து அரபுக் கதைகளின் சில பகுதிகள் ஆபாசமாக இருப்பதாகக் கூறி அக்கதைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என எகிப்தின் வழக்குரைஞர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னித் தீவு சிந்துபாத், அலாவுதீனும் அற்புத விளக்கும், அலிபாபாவும் நாற்பது திருடர்களும் போன்ற சாகசக் கதைகள் உலகெங்கும் பிரசித்தி பெற்றவை.

இந்தக் கதைகள் மத்திய கிழக்குப் பகுதியையும் தெற்காசியாவையும் கதைக்களங்களாக கொண்டுள்ளன. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை இவை.

ஆச்சரியங்களும் அற்புதங்களும் நிறைந்த ஓர் உலகத்தை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி இன்றளவும் இக்கதைகள் ரசிகர்களை ஈர்த்துவருகின்றன.

புத்தகமாக மட்டுமல்லாது திரைப்படங்களாகவும் கார்டூன் படங்களாகவும் வெளிவந்து எல்லா வயதினரையும் இக்கதைகள் வசீகரித்துள்ளன.

எகிப்தில் அண்மையில் வெளியான இக்கதைகளின் புதிய பதிப்பு கூட வெளிவந்தவுடன் விற்றுத் தீர்ந்துவிட்டுள்ளன.

ஆனாலும் தற்போது அங்கு இக்கதைகள் தொடர்பில் ஒரு புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

அந்தக் கதைகளில் சில இடங்களில் பாலியல் உணர்வையும் காம உணர்வையும் வெளிப்படுத்தும் பத்திகள் இருக்கின்றன. உடலின் அங்கங்களை வருணிக்கும் வாசகங்கள் இருக்கின்றன.

அந்தக் கதைகளில் வரும் கவர்ச்சியான வர்ணனைகள் ஆபாசமாக உள்ளதாக இஸ்லாமிய சட்டத்தரணிகள் சிலர் கூறுகின்றனர். ஆதலால் இந்தப் புத்தகத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.

'கைவிலங்குகள் அற்ற வழக்குரைஞர்கள்' என்ற பெயர் கொண்ட அமைப்பைச் சார்ந்த அவர்கள் ஆயிரத்தோரு இரவுகள் கதைகளில் வரும் இப்படியான வர்ணனைகள் மனிதன் தவறான பாதையில் செல்லத் தூண்டுவதாகக் வாதிடுகின்றனர்.

"ஆனால் இஸ்லாத்தை கட்டுப்பட்டித்தனமாக அர்த்தப்படுத்துகின்ற ஒரு போக்கிற்குள் இவர்கள் ஆட்பட்டிருக்கிறார்கள். ஆனால் எகிப்து காலாகாலமாக மதத்தைப் புரிந்துகொண்ட விதத்திலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது." என்கிறார் எகிப்திய எழுத்தாளர் அல்லா அல் அஸ்வனி.

இந்த சட்டத்தரணிகள் ' தாலிபான்கள் போல' நடந்துகொள்கிறார்கள் என எகிப்திய எழுத்தாளர்கள் ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது.

பழமையும் செழுமையும் நிறைந்த இலக்கியப் பாரம்பரியம் கொண்ட எகிப்தில் கடும்போக்கு இஸ்லாத்துக்கும் சகிப்புத்தன்மை கொண்ட இஸ்லாத்துக்கும் இடையில் அவ்வப்போது உரசல்கள் வந்துகொண்டுதான் இருக்கும் என்பதற்கு இச்சம்பவம் மேலும் ஒரு எடுத்துக்காட்டு என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter