>> Friday, May 7, 2010
முல்லைத்தீவில் அகதிகளுக்கு ஜனாதிபதி நிவாரணம் வழங்குகிறார்
படிப்பினைகள் நல்லிணக்க ஆணையம்
இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகள் இடம்பெற்ற மற்றும் மோதல்கள் நடந்த காலப்பகுதிகளின் அனுபவங்களில் இருந்து படிப்பினைகளை பெற்று, நல்லிணக்கத்துக்கு இட்டுச் செல்லும் வகையில் ஆய்வு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்கும் நோக்கில் ஆணைக்குழு ஒன்றை இலங்கை ஜனாதிபதி விரைவில் நியமிப்பார் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த கால மோதல் நிலைமைகளின் போது மக்கள் எதிர்கொண்ட துயரங்களை ஆராய்ந்து அறிந்துகொள்வதற்கு சரியான தருணம் இது என்று கருதுகின்ற ஜனாதிபதி அவர்கள் அவற்றை அறிந்துகொள்வதன் மூலம் பொதுமக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று கூறியுள்ளது.
அண்மைய போர் பற்றிய ஆய்வுகளின் மூலம், அந்தக் காலகட்டத்தில் போர் வேளையில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய சர்வதேச நியமங்கள் எதுவும் எவராலும் மீறப்பட்டதா என்பது கண்டறியப்பட்டு, அவற்றுக்குக் காரணமான தனி நபர் அல்லது குழு எது என்றும் அடையாளம் காணப்படும் என்றும் அந்த அறிக்கை கூறுகின்றது.
அத்தோடு அப்படியான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவரது குடும்பத்தினருக்கு நட்ட ஈடு வழங்குவதற்கும் இந்த ஆய்வுகள் உதவும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
அப்படியான மோசமான நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடவா வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அனைத்து சமூகங்கள் மத்தியில் தேசிய ஒருமைப்பாடு ஏற்படுத்தவும் இந்த ஆணைக்குழுவின் ஆய்வு பயன்படும் என்றும் ஜனாதிபதி ஊடக பிரிவின் அறிக்கை கூறுகிறது.
இந்த ''கற்றுக்கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவில்'' உள்நாட்டிலும் மற்றும் வெளிநாட்டிலும் இருக்கின்ற பல்துறை நிபுணத்துவம் பெற்ற 7 இலங்கையர்கள் இடம்பெறுவார்கள் என்றும், அந்த ஆணைக்குழுவுக்கான நியமங்கள் குறித்து விரைவில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியாகும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
இந்த ஆணைக்குழுவுக்கான ஏற்பாடு குறித்து கருத்துக் கூறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன அவர்கள், முன்னைய ஆணைக்குழுக்கள், அவற்றின் கடந்தகால செயற்பாடுகள் போன்றவை தமக்கு இந்த புதிய ஜனாதிபதி ஆணைக்குழு விடயத்தில் நம்பிக்கையை தராவிட்டாலும், அதனை தான் முழுமையாக புறக்கணிக்க மாட்டேன் என்று கூறுகிறார். இப்படியான முயற்சிகளை ஆரம்பத்திலேயே விமர்சிப்பது ஆரோக்கியமாக இருக்காது என்றும் அவர் கூறினார்.
இந்த ஆணைக்குழு பக்கசார்பற்ற ஒரு சுயாதீன குழுவாக செயற்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment