>> Saturday, October 30, 2010



'எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லும்'


கர்நாடகா-வரைபடம்
கர்நாடக மாநிலத்தில் யெதியூரப்பா தலைமையிலான பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக செயல்பட்ட காரணத்தால், அந்தக் கட்சியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தமை செல்லுபடியாகும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
ஏற்கனவே, இரண்டு நீதிபதிகள் கொண்ட குழு இந்த வழக்கில் தீர்ப்பளித்த போது, இருவரும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட நிலைப்பாட்டுடன் தீர்ப்பளித்தார்கள்.

அதாவது, தலைமை நீதிபதி, ஜே.எஸ். கெஹர், எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்றும், இன்னொரு நீதிபதி என். குமார், செல்லாது என்றும் தீர்ப்பளித்தனர்.

அதையடுத்து, மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு அந்த வழக்கு அனுப்பப்பட்டது.

நீதிபதி வி.ஜி. சபாஹித், பாஜக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று முடிவெடுத்த நிலையில், பெரும்பான்மை முடிவு என்ற அடிப்படையில், எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என முடிவு செய்யப்பட்டது.

பாஜகவைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்களும், அந்தக் கட்சிக்கு ஆதரவளித்து வந்த சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஐந்து பேரும், யெதியூரப்பாவை மாற்ற வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார்கள். அவரது அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக ஆளுநரிடம் அவர்கள் கடிதம் கொடுத்தனர்.


பாஜக ஆதரவு கூட்டம்(ஆவணப்படம்)
அதையடுத்து, ஆளுநரின் உத்தரவுப்படி, இம் மாதம் 11-ம் தேதி நம்பிக்கை வாக்குக் கோரினார் யெதியூரப்பா. கட்சி விரோத நடவடிக்கைகளைக் காரணம் காட்டி, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 11 பேரும், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 5 பேரும், வாக்கெடுப்புக்கு சற்று முன்னதாக தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக சட்டப் பேரவைத் தலைவர் போபையா அறிவித்தார்.

குரல் வாக்கெடுப்பு மூலம் யெதியூரப்பா அரசு வெற்றி பெற்றது.
ஆனால், அது ஜனநாயக நடைமுறை அல்ல என்று கூறிய ஆளுநர் பரத்வாஜ், அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கினார். அதன்படி, 14-ம் தேதி நடந்த இரண்டாவது வாக்கெடுப்பில், 106க்கு 100 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் யெதியூரப்பா அரசு வெற்றி பெற்றது.

இதனிடையே, முதல் வாக்கெடுப்பின்போது, தங்களைத் தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து, 16 எம்.எல்.ஏ.க்களும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். 11 பாஜக எம்.எல்.ஏ.க்களின் மனு தனியாகவும், 5 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் மனு தனியாகவும் விசாரிக்கப்பட்டது.

தற்போது, பாஜக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது, கட்சித் தாவல் தடை சட்டத்தின் 10-வது பிரிவின்படி, பேரவைத் தலைவர் எடுத்த நடவடிக்கை சரியானது தான் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தென்னிந்தியாவில், முதலாவது பாஜக அரசான யெதியூரப்பா அரசுக்கு இது பெரும் ஊக்கமளிக்கும் தீர்ப்பாக அமைந்துள்ளது. இதனிடையே, தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஐந்து சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் மனு நவம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

அதுதொடர்பான தீர்ப்பு எப்படி இருந்தாலும், யெதியூரப்பா அரசுக்கு தற்போதைய நிலையில் நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று கூறப்படுகிறது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter