>> Monday, July 22, 2013

'வட-இலங்கை முதலமைச்சரை தீர்மானிப்பது நான் தான்': டக்ளஸ்

ஈபிடிபி தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
'வடக்கு மாகாணசபைத் தேர்தல் எனது கனவு': டக்ளஸ் தேவானந்தா
இலங்கையில் வட மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கக் கட்சிகளின் கூட்டணி வெற்றிபெற்றால் முதலமைச்சராக வர வேண்டியவரை தீர்மானிக்கும் அதிகாரமும் தார்மீகப் பொறுப்பும் தனக்கே இருப்பதாக ஈபிடிபி கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வடக்கு தேர்தல் பிரச்சாரங்கள் தனது தலைமையிலேயே நடப்பதாகவும் தனது தீர்மானத்தின்படியே முதலமைச்சர் பதவி அமையும் என்றும் டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறினார்.


வடக்கு மாகாணசபைத் தேர்தல் தனது நீண்டகால கனவு என்றும் அவர் தெரிவித்தார்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கான முயற்சிகளுக்கு என்ன நடந்தது என்பது பற்றியும் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழேயே போட்டியிடும் தீர்மானத்திற்கான காரணம் பற்றியும் பிபிசி தமிழோசை எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அமைச்சர் டக்ளஸ் இந்தக் கருத்தினைக் கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்ட தயா மாஸ்டரும் ஆளும் அரச கூட்டணியில் போட்டியிடுகிறார்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அண்மையில் இணைந்துகொண்ட தயா மாஸ்டரும் ஆளும் அரச கூட்டணியில் போட்டியிடுகிறார்
ஏற்கனவே மத்தியில் ஆளும் அரசாங்கக் கூட்டணியில் அங்கம் வகிப்பதாலும் அரசாங்கத்திலிருந்து வெளியேறி மாகாணசபை தேர்தலில் போட்டியிட விரும்பாத படியாலேயே ஆளும் கூட்டணியின் கீழ் போட்டியிட இணங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், அரசாங்கக் கூட்டணியில் அங்கம் வகித்தாலும் தமது கட்சி தனித்துவத்துடனேயே இயங்கவுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.
அரசாங்க கூட்டணியில் இருப்பதன் மூலமே வடக்கு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்று நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஆளும் சுதந்திரக் கூட்டமைப்புக்கு தலைமை தாங்கும் சுதந்திரக் கட்சியில் புதிதாக இணைந்துகொண்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரையும் இன்னும் பலரையும் அக்கட்சி வட-இலங்கை தேர்தலில் களம் இறக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter