>> Friday, May 31, 2013

'லண்டனில் இருந்து கோயிலுக்கு வந்தவர் இலங்கையில் கைது'

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் திங்களன்று நடைபெற்ற வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக லண்டனில் இருந்து வருகை தந்திருந்த குடும்பஸ்தர் ஒருவர் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

வற்றாப்பளையில் உள்ள தனது பெற்றாருடைய வீட்டில் இருந்தபோது, வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் இருக்கின்றார்களா என வீட்டிற்கு வந்து இருவர் முதலில் விசாரித்துவிட்டுச் சென்றதாகவும் பின்னர் மாலையில் வீட்டிற்கு வந்த 6 பேர் அவரைக் கைது செய்து கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாங்கள் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவில் இருந்து வந்துள்ளதாகத் தெரிவித்த அவர்கள் காலையில் வவுனியாவில் உள்ள தமது அலுவலகத்தில் வந்து சந்திக்கும்படி கூறியதற்கமைய இன்று காலை வவுனியாவுக்குச் சென்றபோது, அவரை மேல் விசாரணைக்காக உடனடியாகக் கொழும்புக்குக் கொண்டு செல்வதாகவும் சனிக்கிழமை வந்து அவரைப் பார்வையிடலாம் என்றும் கூறியதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 39 வயதுடைய மயில்வாகனம் கணேசரூபன் என்றும், நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் பிரித்தானிய பிரஜை என்றும் 18 வருடங்களின் பின்னர் தாயகத்திற்கு அதுவும் ஆலய நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக வந்து, அடுத்த வாரமே தாங்கள் லண்டன் திரும்பிச் செல்லவிருந்த வேளையிலேயே, இவ்வாறு தனது கணவன் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவருடைய மனைவி சுகந்தினி தெரிவித்தார்.

இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினரிடம் முறையிட்டிருப்பதுடன், பிரித்தானிய அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter