>> Friday, May 17, 2013


ஐ பி எல் போட்டி முறைகேடுகள்: மூன்று வீரர்கள் கைது


இந்தியா மட்டுமல்லமால் கிரிக்கெட் உலகில் மிகப் பிரபலமாகவும் பல கோடி ரூபாய்கள் பணம் புழங்கும் ஐ பி எல் போட்டிகள் மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இந்திய அணிக்காக விளையாடிய ஸ்ரீசாந்த் உட்பட மூன்று பேர் முறைகேடுகளில் ஈடுபட்டதான குற்றச்சாட்டில் டில்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் ஸ்ரீசாந்த, அன்கித் சவான் மற்றும் அஜித் சந்திலா ஆகியோர், குறிப்பிட்ட நேரங்களில் முன்கூட்டியே திட்டமிட்ட வகையில் அதாவது ஸ்பாட் ஃபிக்ஸிங் முறையில் பந்து வீச உடன்பட்டிருந்தார்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர 11 சூதாட்ட முகவர்கள் அதாவது புக்கிகளையும் தாங்கள் கைது செய்துள்ளதாக டில்லி போலிஸ் ஆணையாளர் நீரஜ் குமார் இன்று மாலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஐ பி எல் போட்டிகளை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்த விளையாட்டு போட்டிகள் தொடங்கிய காலத்திலிருந்தே சர்ச்சைகளும் தொடர்ந்தன. இப்போட்டிகளை உருவாக்கி செயல்வடிவம் கொடுத்து வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்ற லலித் மோடி மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அணிகளின் உரிமையாளர்கள் மீது இந்தியாவின் வருமான வரித் துறையினரும், அமலாக்கப் பிரிவினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

"ஐ பி எல் தொடரும்"

துவக்க விழா நிகழ்ச்சிகளின் போது
தற்போது கைது செய்யப்பட்டுள்ள இந்த மூன்ற் விளையாட்டு வீரர்கள் மற்றும் இவர்களை வழிநடத்திய சூதாட்ட முகவர்கள் ஆகியோரிடையே ஒரு புரிந்துணர்வு இருந்தது என்றும் காவல்துறையினர் சுட்டிக்காட்டுகிறார்கள்
அதன் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட ஓவரில், குறைந்தது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு ஓட்டங்களை கொடுப்பது என்று முன்னரே முடிவு செய்து அதன் படி செயல்பட்டனர் என்றும் இது சட்டவிரோதமான ஒன்று எனவும் காவல்துறையினர் கூறுகிறார்கள்.
இந்த ஊழலில் போட்டி ஒன்றுக்கு 60 லட்சம் ருபாய்கள் வரை தரப்படும் என பேரம் பேசப்பட்டிருந்தது எனவும் நீரஜ் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆனால் ஸ்ரீசாந்தின் குடும்பத்தாரோ அவர் எந்தத் தவறையும் செய்யவில்லை. அவர் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார் என்று கூறுகிறார்கள்.
ஐ பி எல்: பரபரப்புகள், விறுவிறுப்புகள், புகார்கள் நிறைந்த ஒரு புதிர்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ஸ்ரீநிவாசனோ காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளதால் உடனடியாக அவர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்றும், தமது தரப்பிலும் முழுமையான விசாரணைகள் நடைபெற்று முடிந்த பிறகே தமது முடிவு என்ன என்பதை சொல்ல முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஐ பில் போட்டிகளில் பங்கு பெறும் ஓரிருவர் இவ்வகையான முறைகேடுகளில் ஈடுபடுவதால் அந்தப் போட்டிகளையே நிறுத்தி விட வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கைகள் சரியானது அல்ல என்றும், இப்போட்டிகள் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.
53 ஒரு நாள் போட்டிகளிலும் 27 டெஸ்ட் பந்தயங்களிலும் விளையாடியிருக்கும் ஸ்ரீசாந்த் இதற்கு முன்னரும் சர்ச்சைகளில் சிக்கியவர். ஆனால் சூதாட்டம் தொடர்பான குற்றச்சாட்டுக்குள்ளாவது இதுவே முதல் முறை.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கூட்டு உரிமையாளர் நடிகை ஷில்பா ஷெட்டி
ராஜஸ்தான் ராயல்ஸ் குழுவின் இணை உரிமையாளர் ஷில்பா ஷெட்டி, கைதுகள் தங்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளிப்பதாகவும் ஆனால் போலீசார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராயிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
கடந்த ஆண்டு நடந்த ஐபில் போட்டிகளின் போது ஸ்பாட் பிக்சிங் குற்றச்சாட்டில் சிக்கிய ஐந்து வீரர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீசாந்த் உட்பட இப்போது கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரையும் ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter