>> Tuesday, May 28, 2013
வேதமூர்த்திக்கு பதவி: மலேசிய இந்திய காங்கிரஸ் எதிர்ப்பு

மஇக தலைவர் பிரதமர் நஜீப் ரசாக்குடன்
மலேசியாவில் இந்திய வம்சாவளி மக்களின் நலன்கள் குறித்த விடயங்களுக்கு பொறுப்பாக ஹிண்ட்ராஃப் அமைப்பின் தலைவர் வேதமூர்த்தி நியமிக்கப்பட்டமைக்கு மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇக) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பிரதமர் நஜீப் ரசாக்கின் நேரடிப் பார்வையில், பிரதமர் அலுவலகத்தில் இந்தத் துறைக்கான துணை அமைச்சராக வேதமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளதை எந்த வகையிலும் தம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாது என்று மஇக-வின் தலைவரும் சுற்றுச்சூழல் அமைச்சருமான பழனிவேலு பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

கடந்த பல தசாப்தங்களாக மலேசியாவிலுள்ள இந்திய வம்சாவளி மக்களின் நலன்களை தாங்களே முன்னெடுத்து வருவதாகவும், தமது கட்சியியே அவர்களது “தாய்க் கட்சி” என்றும் பழனிவேலு சுட்டிக்காட்டுகிறார்.
ஓர் அரசியல் கட்சியான தங்களிடம் இந்திய வம்சாவளி மக்களின் நலன்கள் குறித்த துறையை அளிக்காமல், ஒரு தனி நபரான வேதமூர்த்தியிடம் அது அளிக்கப்பட்டது தவறு என்றும் அவர் வாதிடுகிறார்.
தமது கோரிக்கைகளை பிரதமர் நஜீப் ரசாக் நிராகரித்தால் தமது கட்சி அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுக்கும் என்று பழனிவேலு கூறினாலும், அவர்கள் அமைச்சரவையிலிருந்து விலகுவார்களா என்கிற கேள்விக்கு பதிலளிக்கவில்லை.
வேதமூர்த்தி மஇக-வை எதிர்ப்பதையே குறியாகக் கொண்டிருக்கிறார் என்றும் அவரால் இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்றும் பழனிவேலு மேலும் கூறுகிறார்.
இந்த விடயம் தொடர்பில் பிரதமர் நஜீப் தரப்பிலிருந்தோ அல்லது வேதமூர்த்தி தரப்பிலிருந்தோ கருத்துக்கள் ஏதும் வெளியாகவில்லை
0 comments:
Post a Comment