>> Friday, January 22, 2010

ஐ.பி.எல்.: பாகிஸ்தான் வீரர்கள் ஏலம் எடுக்கப்படாதது தொடர்பான சர்ச்சை வலுக்கிறது

ஐ.பி.எல். எனப்படும் இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் இந்த ஆண்டுக்கான போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் வீரர்கள் யாரும் தேர்ந்தெடுக்கப்படாதது இந்தியா – பாகிஸ்தான் இடையில் கருத்து மோதல்களை மேலும் அதிகரித்துள்ளது.

பாகிஸ்தான் வீரர்கள் தேர்வு செய்யப்படாததற்கு, இந்திய அரசு மீது பாகிஸ்தான் பழிபோடுவது துரதிர்ஷ்டமானது, ஐ.பி.எல்.லுக்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கருத்துத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் வீரர்கள் ஐ.பி.எல் போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படாதது குறித்தும், அவர்களுக்கு விசா வழங்குவது தொடர்பாகவும் வெளியான செய்திகள் தவறானவை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.

ஆனால் இவ்விவகாரம் பாகிஸ்தானில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. வீரர்களை மட்டுமன்றி நாட்டையே அவமானப்படுத்திவிட்டதாகவும், அது திட்டமிட்டு நடத்தப்பட்ட காரியம் என்றும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பாகிஸ்தான் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படாததைக் கண்டித்து, அந்த நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழும் தங்கள் இந்தியப் பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்தது.

மேலும், அடுத்த மாதம் டெல்லியில் நடைபெற் உள்ள உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணியை அனுப்பக் கூடாது என்று அந்நாட்டில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.



--------------------------------------------------------------------------------


இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக சிவசங்கர் மேனன் நியமனம்


சிவசங்கர் மேனன்
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டின் நான்காவது தேசிய பாதுகாப்பு ஆலோசகரான சிவசங்கர் மேனன் ஓரிரு தினங்களில் புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்று தெரிகிறது.

வெளியுறவுச் செயலர் பதவியிலிருந்து கடந்த ஆண்டு அவர் ஓய்வு பெற்றார்.

இதுவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகராப் பணியாற்றி வந்த எம்.கே. நாராயணன், மேற்கு வங்க மாநில ஆளுநராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசியப் பாதுகாப்பைக் கண்காணிப்பதற்கென பாதுகாப்பு ஆலோசகர் பதவி கடந்த 1998-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. முதல் பாதுகாப்பு ஆலோசகராக பிரிஜேஷ் மிஸ்ரா நியமிக்கப்பட்டார். அதன்பிறகு ஜே.என். தீட்ஷித் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

அணுசக்தி ஆளுமை ஆணையத்தின் செயல்பாட்டுக் குழுவி்ன் தலைவராக செயல்படுவதும் பாதுகாப்பு ஆலோசகரின் முக்கியப் பணிகளில் ஒன்று.



--------------------------------------------------------------------------------


காஷ்மீரில் பிரி-பெய்ட் செல்லிட தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை நீக்கம்



இந்திய ஆளுகைக்கு உட்பட்ட ஜம்மு காஷ்மீரில் பிரி-பெய்ட் எனப்படும் பயன்பாட்டுக்கு முன்பு பணம் கட்டும் வகையிலான செல்லிட தொலைபேசி பயன்பாட்டுக்கு இருந்த தடையை இந்திய அரசு நீக்கியிருக்கிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இத்தகைய செல்லிட தொலைபேசிச் சேவை கடந்த நவம்பர் மாதம் முதல் அங்கே தடைசெய்யப்பட்டிருந்தது.

இத்தகைய செல்லிட தொலைபேசிச் சேவைகளை கோரும் வாடிக்கையாளர்களின் அடையாளத்தை, தொலைபேசி நிறுவனங்கள் முறையாக சரிபார்ப்பதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த தடை நீக்கத்தை இங்குள்ளவர்கள் வரவேற்பதாக காஷ்மீரில் இருக்கும் பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

அதேசமயம் கடந்த இரண்டு மாத காலமாக இது தொடர்பில் நிலவிய குழப்பமும், அது உருவாக்கிய அசவுகரியங்களும் இங்குள்ளவர்களை பெரிதும் கோபப்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறுகிறார்.



--------------------------------------------------------------------------------


ஜனாதிபதித் தேர்தல்: வட மாகாண மக்களின் மனநிலை

போரினால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்து தற்போது மீள்குடியேற்றம் ஆகிவருகின்ற வட மாகாண மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொண்டுவருகின்றனர்.

விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்டிருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள வன்னி இளைஞர்கள் விவகாரம் இம்மக்களைப் பொறுத்தவரை இத்தேர்தலில் ஒரு முக்கிய விடயமாக எதிரொலிக்கும் என்று தெரிகிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் புனர்வாழ்வு பெறுவதில் பல பணிகள் நிறைவேற்றப்படாத நிலையில் மிகவும் அவசரப்பட்டு இந்தத் தேர்தல் நடத்தப்படுவதாக வன்னி மக்கள் பலர் கருதுகின்றனர்.



--------------------------------------------------------------------------------


சவுதியில் ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சியில் ஈடுபட்ட இளவரசர் கைது


இளவரசர் பந்தர் பின் சுல்தான்
சவுதியரேபியாவை ஆளும் ராஜ குடும்பத்தின் மிக முக்கிய இளவரசர் ஒருவர், அங்கு மாதக் கணக்கில் வெளியில் பொதுவிடங்களில் தோன்றாமல் இருந்துவருவது, சவுதியரேபியாலோ அல்லது வேறு ஒரு அரபு நாட்டிலோ நடந்ததாகக் தெரிவிக்கப்படும் அதிரடி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் அவர் சம்பந்தப்பட்டிருந்தார் என்கிற ஓர் ஊகம் பரவச் செய்துள்ளது.

இளவரசர் பந்தர் பின் சுல்தான் சவுதியரேபியாவுடைய தேசிய பாதுகாப்பு சபையின் தலைவர் ஆவார். பல ஆண்டுகளாக சவுதி ராஜ்ஜியத்துடைய வெளியுறவுக் கொள்கையின் வடிவமைப்பாளராக இருந்தவந்தவர் இவர் என்று நம்பப்படுகிறது.

ஆனால் முறியடிக்கப்பட்ட ஓர் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை அடுத்து இவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்று ஊடகங்களிலும், இணையதள கருத்து பரிமாற்ற மன்றங்களிலும் தற்போது செய்திகள் அடிபடுகின்றன.

இவரது தந்தையான பட்டத்து இளவரசர் சுல்தான் பலகாலம் வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை எடுத்துவிட்டு நாடுதிரும்பியபோது அவருக்கு ராஜ குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு அளித்த வரவேற்பில்கூட பந்தர் பின் சுல்தான் இருந்திருக்கவில்லை என்பது பலராலும் கவனிக்கப்பட்டுள்ளது.

மன்னர் அப்துல்லாவுக்கு எதிராக சதி வேலையில் ஈடுபட்டமைக்காக வேறு மூன்று இராணுவத் தளபதிகளுடன், இளவரசர் பந்தர் பின் சுல்தானும் சிறையில் இருந்துவருகிறார் என சிலர் கூறுகின்றனர்.

சவுதியரேபியாவின் பிராந்திய வைரியாக விளங்கும் இரானின் முக்கிய கூட்டாளியான சிரியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு செய்யும் சதி வேலைகளில் ஈடுபட்டமைக்காக இவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று வேறு சிலர் கூறுகின்றனர்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter