>> Monday, January 18, 2010

மேற்குவங்க மாநில முன்னாள் முதலமைச்சர் ஜோதிபாசு காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், மேற்குவங்க மாநில முன்னாள் முதலமைச்சருமான ஜோதிபாசு அவர்கள், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மரணமடைந்தார்.

95 வயதான ஜோதிபாசு, நிமோனியா காய்ச்சல் காரணமாக, இந்த மாதம் முதல் தேதி கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 17 தினங்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஞாயிறு காலை 11 மணி 47 நிமிடங்களுக்கு அவரது உயிர் பிரிந்தது

ஜோதிபாசு தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாகக் கொடுத்திருக்கிறார். செவ்வாய்கிழமை இறுதியாத்திரைக்குப் பிறகு, அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அவரது சடலம் ஒப்படைக்கப்படும்.

இந்திய அரசியலிலும், இடதுசாரிக் கொள்கைகளுக்கு வலுச்சேர்ப்பதிலும் முக்கியப் பங்கு வகித்த ஜோதிபாசு, 1977-ம் ஆண்டு முதல் 23 ஆண்டுகள் தொடர்ந்து மேற்குவங்க மாநில முதலமைச்சராகப் பதவி வகித்தார். அதன் மூலம், நீண்ட காலம் முதலமைச்சர் பதவி வகித்தவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

இந்திய அரசியலில் எளிமையான, தன்னலமற்ற தலைவர்களாகக் கருதப்பட்ட ஜோதிபாசு, ரஷ்யப் புரட்சிக்கு முன்பு பிறந்து இதுவரை உயிரோடு இருந்த கடைசி கம்யூனிஸ்ட் தலைவராகவும் பார்க்கப்படுகிறார்.



--------------------------------------------------------------------------------


டப்ளின் விசாரணைக்குழு சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு நிராகரித்துள்ளது


விசாரணை குழு பார்வையாளர்கள்

இலங்கையில் கடந்த மே மாதத்தில் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்ட மோதல்கள் நடைபெற்ற காலப்பகுதியில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைகளை நடத்திய டப்ளின் விசாரணைக் குழுவொன்று இலங்கை அரசு மீது குற்றச்சாட்டுக்களுக்கான பொறுப்பை சுமத்தியுள்ளது.

அயர்லாந்து தலைநகர் டப்ளினில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களில் விசாரணைக்காக கூடிய டப்ளின் போர்க்குற்றங்கள் தொடர்பான நியாயசபை இந்த தீர்மானத்தை இறுதியாக வெளியிட்டுள்ளது.

இலங்கையில் போர் நடைபெற்ற காலப்பகுதியில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டமை, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் புரிந்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்களையும் இலங்கை அரசு மீது சுமத்தியுள்ள இந்ந விசாரணைக்குழு இனப்படுகொலை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்த தீர்மானத்தை எட்டுவதற்கு மேலும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டியுள்ளதமாக தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த நியாய சபையின் தீர்மானத்தை இலங்கை அரசு அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.



--------------------------------------------------------------------------------


ஹெய்ட்டி நிலநடுக்கத்தின் மையப்புள்ளியில் பெரும் பாதிப்பு


நிலநடுக்கத்தினால் பெரும்பாலான கட்டிடங்கள் பெரும் சேதமடைந்துள்ளன



ஹெய்ட்டியில் நிலநடுக்கம் ஏற்பட்ட மையபுள்ளியில் இருந்து வரும் தகவல்கள், தலைநகரை விட இந்த பகுதியில் பாதிப்பு மிக மிக அதிகமாக இருப்பதாக தெரிவிக்கின்றன என பிபிசி செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தலைநகர் போர்த் ஒ பிரான்ஸ்க்கு மேற்கே இருக்கின்ற லேகோனில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அங்கு இருக்கின்ற கட்டிடங்கள் அனைத்துமே நாசமாகி, பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

ஐ.நா வின் கணக்குப்படி இந்த நகரத்தில் 80 முதல் 90 சதவீத கட்டிடங்கள் நாசமாகியுள்ளன. இந்த நகரத்தில் தப்பி உயிர்பிழைத்த மக்கள் அருகில் இருக்கின்ற கரும்பு தோட்டங்கள் அல்லது சதுப்புநில காடுகளில் தஞ்சம் அடைந்திருப்பதாக பிபிசி செய்தியாளர் மார்க் டோயல் கூறுகின்றார்.

இதே நேரத்தில் தலைநகர் போர்த் ஒ பிரான்ஸில் அமைப்புகளிடம் இருந்து உதவிகளை எதிர்நோக்கி காத்திருக்கும் மக்களிடம் ஒரு விதமான பதற்ற நிலை காணப்படுகிறது.

இப்போது ஆக்ஸ்பாம், ஐ,நா போன்றவை உணவு மற்றும் குடிநீரை விநியோகித்து வருகின்றன. மக்களுக்கு தற்போது சென்று சேரும் உதவிப்பொருட்களின் அளவு குறைவாக இருந்தாலும், குறைந்தப்பட்சம் இதுவாவது தற்போது நடக்கிறதே என்ற நிறைவு காணப்படுவதாக அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

செவ்வாய்கிழமையன்று ரிக்டர் அளவு கோளில் 7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தில் 50,000 முதல் 1 லட்சம் பேர் வரையில் பலியாகியிருக்கலாம் என பான் அமெரிக்கன் சுகாதார அமைப்பு கூறியுள்ளது. ஹெய்ட்டி பிரதமரோ, இந்த நிலநடுக்கத்தில் குறைந்தப்பட்சம் ஒரு லட்சம் பேராவது பலியாகிருப்பார்கள் என்று கூறியுள்ளார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter