>> Wednesday, January 20, 2010

ஓஷியானிக் கப்பலில் உள்ள தமிழ் அகதிகள் சிலருக்கு தஞ்சமளிக்க நியூசிலாந்து முடிவு


ஆஸ்திரேலிய கடற்பரப்பு-வரைபடம்
கடந்த அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவின் சுங்கத் துறைக்கு சொந்தமான ஒஷியானிக் வைக்கிங் கப்பலில் இந்தோநேஷியாவுக்கு அப்பால் கடலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கைத் தமிழர்களில் சிலருக்கு தஞ்சமளிப்பது குறித்து தாம் யோசித்து வருவதாக நீயுசிலாந்து அரசு கூறியுள்ளது.

ஐ நாவால் அகதிகள் அந்தஸ்த்து உறுதிசெய்யப்பட்ட 13 பேருக்கு, நீயுசிலாந்தின் வருடாந்த அகதிகள் ஒதுக்கீட்டின் கீழ் நாட்டுக்குள் வர அனுமதிக்கப்படுவதற்காக பரிசீலிக்கப்படுவார்கள் என்று குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக ஒஷியானிக் வைக்கிங்கில் இருந்து மீட்கப்பட்ட 78 தமிழர்களில் யாரையும் ஏற்க தான் விரும்பவில்லை என்று நீயுசிலாந்து அரசு தெரிவித்திருந்தது. தஞ்சமளிப்பதற்கான வரிசையை மீறி வருபவர்களை ஊக்குவிக்க தான் விரும்பவில்லை என்பதே இதற்கு காரணம் என்றும் அது தெரிவித்துள்ளது.



--------------------------------------------------------------------------------


இலங்கையின் வடக்கு கிழக்கில் மூவினங்கள் சார்ந்த பிரதான அரசியல் கட்சி தலைவர்களும் ஒரே மேடையில்


த.தே.கூ மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள்

இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பிரதான தமிழ், முஸ்லிம்,சிங்கள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து ஒரே மேடையில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என தீர்மானித்திருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் தற்போது அதற்கான பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் தற்போது தங்கியிருக்கும் அக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அம்பாறை மாவட்டத்தில் மூவின மக்களும் வாழும் மத்திய முகாம் கிராமத்தில் நடை பெற்ற கூட்டமொன்றிலும் நேற்று கலந்து கொண்டு உரையாற்றினர்.

33 வருடங்களின் பின்னர் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒரே மேடையில் தோன்றி உரையாற்றிய இக் கூட்டத்தில் மற்றுமொரு சிறப்பு அம்சமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமுன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி ஜே.வி.பி ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,மாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் உரையாற்றினர்.



--------------------------------------------------------------------------------


வங்கதேச பிரதமருடன் இந்திய தலைவர்களும் ஜோதி பாசுவுக்கு இறுதி மரியாதை


ஜோதி பாசுவின் இறுதி ஊர்வலம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமான இந்தியாவின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவரும், மேற்கு வங்க மாநிலத்தில் தொடர்ந்து 23 ஆண்டுகள் முதலமைச்சராகப் பதவி வகித்துவந்தவருமான ஜோதிபாசுவின் இறுதி யாத்திரை செவ்வாய்க்கிழமை கொல்கத்தாவில் நடைபெற்றது.

95 வயதான ஜோதிபாசுவுக்கு அஞ்சலி செலுத்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹஸீனா, இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்பட மூத்த அரசியல் தலைவர்கள் பலர் கொல்கத்தாவுக்கு வந்திருந்தார்கள்.

அவரது உடல், சட்டப்பேரவைக் கட்டடத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையகத்துக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு பொதுமக்களும் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர், ஜோதிபாசுவின் விருப்பப்படி மதச்சடங்ககுள் ஏதும் செய்யாமல் அவரது உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக அங்குள்ள ஒரு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.



--------------------------------------------------------------------------------


திருமணத்திற்கு முன்னரான உடலுறவு பற்றி நடிகை குஷ்பு வெளியிட்ட கருத்துக்களில் குற்றமில்லையென கூறமுடியாது - இந்திய உச்ச நீதிமன்றம்


நடிகை குஷ்பு - ஆவணப்படம்
திருமணத்துக்கு முன்பு பெண்கள் பாதுகாப்பான உடலுறவு கொள்வதில் தவறு ஏதும் இல்லை என்று தமிழ் நடிகை குஷ்பு தெரிவித்த கருத்து, குற்றமில்லை என்று சொல்ல முடியாது என இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

எந்தச் சூழ்நிலையில், எத்தகைய கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்திருக்கிறார் என்ற விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று நடிகை குஷ்புவுக்கு தலைமை நீதிபதி இன்று உத்தரவிட்டார்.

இந்தியாவில் மாறிவரும் உடலுறவுப் பழக்கங்கள் தொடர்பாக, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் பத்திரிக்கைக்கு நடிகை குஷ்பு பேட்டியளித்திருந்தார்.

அதில், பெண்கள் திருமணத்துக்கு முன் உடலுறவு வைத்துக் கொள்வதில் தவறில்லை என்றும், அவ்வாறு உறவு கொள்ளும்போது உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும் என்றும் கூறியிருந்தார். மேலும், படிப்பறிவுள்ள ஓர் ஆண்மகன், தனது மனைவி கற்புடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு என்றும் கூறியிருந்தார்.

இதையடுத்து குஷ்புவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி நடிகை குஷ்பு உயர் நீதி்மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஆனால், குறறச்சாட்டுக்களுக்கு பூர்வாங்க ஆதாரம் இருப்பதாகக் கூறி, குஷ்புவின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. அத்துடன், பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள எல்லா வழக்குகளையும் சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு மாற்றி 6 மாதங்களில் விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதை எதிர்த்து நடிகை குஷ்பு உச்சநீதிமன்றத்தில் செய்த மேல்முறையீடு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் முன் விசாரணைக்கு வந்தது. தான் குற்றம் ஏதும் செய்யவில்லை என்றும், யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு அத்தகைய கருத்தைத் தெரிவிக்கவில்லை என்றும் குஷ்பு தனது மனுவில் தெரிவித்திருந்த கருத்துக்களை நீதிமன்றம் ஏற்கவில்லை.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter