>> Monday, November 9, 2009

பிரபாகரன் உருவாக்கிய இன உணர்வு புரட்சியாக வெடிக்கும்: சீமான்

பிரபாகரன் உருவாக்கிய இன உணர்வு தமிழகத்தில் இனி புரட்சியாக வெடிக்கும் என்று திரைப்பட இயக்குநர் சீமான் கூறியுள்ளார்.

நாமக்கல் குமாரபாளையம் நகராட்சியில் நாம் தமிழர் இயக்க கலந்துரையாடல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சீமான்,

கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிப்பதற்காகவே இன உணர்வுமிக்க நாங்கள் அதிமுக கூட்டணியை ஆதரித்தோம். அதன் விளைவாக தென் மாவட்டத்தில் தென்காசியையும், வடமாவட்டத்தில் ஈரோட்டிலும் வென்றோம்.

இலங்கையில் தமிழர்கள் கொத்துக்கொத்தாக படுகொலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் வாய் திறக்கவில்லை. மனிதநேயம் பேசும் மார்க்ஸிஸ்டுகளும் இதனை ஆதரிக்கவில்லை. திராவிடம் பேசி பேசி தமிழ் இன உணர்வை இழந்துவிட்டோம்.

கடந்த 2004 பாராளுமன்றத் தேர்தலில் சோனியா காந்தி பிரதமர் ஆக தமிழகம் புதுவையில் இருந்து 40 க்கு 40 இடங்களை தந்தோம். ஆனால் அவர் கட்சியில் இருந்து வளர்ந்த சரத்பவார், சங்மா போன்றவர்கள் வெளிநாட்டவர் பிரதமர் ஆவதா? என எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

உங்கள் மீது நம்பிக்கை வைத்து 40 எம்.பிக்களை வழங்கிய தமிழர்களுக்கு நீங்கள் தந்த பரிசு, அருகே உள்ள இலங்கையில் தமிழர்களை அழிக்க ஆயுதம் கொடுத்து உதவினீர்கள். எல்லா நாட்டு விடுதலையும் ஆதரித்த இந்தியா தமிழ்ஈழ விடுதலையை மட்டும் பயங்கரவாதம் என்கிறது.

இலங்கையில் தமிழர்களுக்கு சிங்களவன் சமஉரிமை கொடுப்பானா? ராஜீவ்காந்தி அனுப்பிய அமைதிப்படை அங்கு சென்று சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் நடுவராகத்தானே செயல்பட்டிருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை மாறாக தமிழ் மக்களை சிங்கள ராணுவம் எதைச்செய்ததோ அதைவிட கொடுமையான காரியங்களில் ஈடுபட்டது. அமைதிப்படை என்ற போர்வையில் இந்திய ராணுவம் அங்கு செல்லாமல் இருந்திருந்தால் சுதந்திரத்தமிழ் ஈழம் குடியரசு அமைந்து 20 ஆண்டுகள் ஆகியிருக்கும் .

உலகின் பெரிய தேசிய இனமான தமிழ் இனத்திற்கு என தனி ஈழ நாடு கிடைக்க பிரபாகரன் பாடுபட்டு வந்தார். அதற்காக ஒரு லட்சம் தமிழ் ராணுவத்தை அமைத்திருந்தார். அதனை சிங்கள ராணுவம் ஒன்றும் செய்ய முடியவில்லை. மாறாக சீனா, அமெரிக்கா, இந்தியா போன்ற வலிமை மிக்க நாடுகளின் ராணுவ துணையோடு ஈழ ராணுவத்தை அழித்திருக்கிறார்கள் .

குஜராத்தில் நிலநடுக்கம். தன்வீட்டில் நடந்த அவலமாக கருதி உதவினோம், கார்க்கில் போராட்டத்தில் அதிக நிதி கொடுத்து உதவினோம் . இந்தியர் என்ற உணர்வில் தமிழர்களாகிய நாம் உயர்ந்து நிற்கிறோம். இந்திய நாட்டில் உள்ள அனைவரும் சகோதரர்கள் என்று கூறிக்கொள்கிறோம். கேரளாவில் முல்லைபெரியாற்றில் இருந்து மலையாளி தண்ணீர் தரமறுக்கிறான், காவிரியில் கன்னடன் தண்ணீர் தரமறுக்கிறான். பாலாற்றில் தெலுங்கன் தண்ணீர் தர மறுக்கிறான். இதுதான் இந்தியாவா?

ஆறரைக்கோடி தமிழர்கள் வாழும் தமிழகத்தை ஆளுகின்ற கட்சி இலங்கையில் ஒரு தேசிய இனம் அழிக்கப்படுவது கண்டு ஆதங்கப்படவில்லை. அந்தளவுக்கு காங்கிரஸ், திமுக அதிமுக கட்சிகள் தமிழகத்தில் தமிழ் இன உணர்வை மழுங்க வைத்து விட்டது . தமிழகத்தில் தமிழ் ஈழ விடுதலையை பெற்றுத்தர உண்மையில் விரும்பியவர் மறைந்த எம்ஜியார்தான். அவர்தான் பல்வேறு உதவிகளைச் செய்தார். அவருக்குப்பின் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக, அதிமுக கட்சிகள் அந்த உணர்வோடு செயல்பட்டிருந்தால் ஈழத்தில் ஒரு தமிழன் கூட செத்திருக்க மாட்டான். மாவீரன் பிரபாகரன் உருவாக்கிய இன உணர்வு தமிழகத்தில் இனி புரட்சியாக போராட்டமாக வெடிக்கும் என்றார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter