>> Thursday, November 26, 2009

மும்பை தாக்குதல்:பாகிஸ்தானில் 7 பேர் மீது குற்றப்பத்திரிகை


தாக்குதலுக்கு இலக்கான தாஜ்மஹால் ஹோட்டல்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி மும்பையில் இடம் பெற்ற தீவிரவாத தாக்குதல் தொடர்பில் 7 பேர் மீது பாகிஸ்தானிய நீதிமன்றம் ஒன்றில் அந்த நாட்டின் அரசு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இதில் அந்தத் தாக்குதலை நடத்த சூத்திரதாரியாக இருந்தவர் என்று குற்றம் சாட்டப்படும் ஜாகி உர் ரஹ்மான் லக்வியும் அடக்கம். அவருடன் சேர்த்து அனைவர் மீதும் பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 7 பேரும் தாங்கள் குற்றவாளிகள் அல்ல என்று தெரிவித்துள்ளதாக அவர்களின் வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.

மும்பை தாக்குதல் சம்பவங்களில் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ள தாக்குதலாளியான அஜ்மல் கசாப் உட்பட நீதிமன்றத்தில் பிரசன்னமாகாத மற்ற 9 பேர் மீதும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் 9 பேரும் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜாமீன் மனுக்கள் நிராகரிப்பு


ஆஜ்மல் கசாப்
இன்று நீதிமன்றத்தில் ஆஜரான 7 பேரின் ஜாமீன் மனுவும் நீதிபதி அக்ரம் அவான் அவர்களால் நிராகரிக்கப்பட்டது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட சமயத்தில் நீதிமன்றத்தில் கடுமையான பாதுகாப்புகள் நிலவின, உள்ளேயும் வெளியேயும் செய்தியாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் மாதம் 5 தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை கடந்த ஜூலை மாதம் ஆரம்பமாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் அது பிறகு ஒத்திப் போடப்பட்டது.

வழக்கு தொடர்பிலான ஆதாரங்களை சேகரிக்க தங்களுக்கு கூடுதல் அவகாசம் தேவை என்று பாகிஸ்தானிய அதிகாரிகள் தரப்பில் அப்போது கூறப்பட்டது.

மும்பையில் கடந்த ஆண்டு இடம் பெற்ற தாக்குதல்களுக்கு பிறகு பாகிஸ்தானுடனான அமைதி பேச்சுவார்த்தைகளை இந்தியா இடைநிறுத்தியது.

இந்தத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படும் வரை அமைதி பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாகாது என்று கடந்த ஜூலை மாதம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



--------------------------------------------------------------------------------


பயங்கரவாதத்துக்கு எதிரான முயற்சியை இரட்டிப்பாக்க இந்தியாவும் அமெரிக்காவும் உறுதி


இந்தியப் பிரதமரும் அமெரிக்க அதிபரும்


இந்தியாவும் அமெரிக்காவும் பயங்கரவாதத்துக்கெதிரான தங்களது முயற்சிகளை இரட்டிப்பாக்கி, பயங்கரவாதத்துக்கெதிரான கூட்டுறவு முயற்சி ஒன்றைத் துவங்கவும் உறுதி பூண்டுள்ளன.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் அமெரிக்க விஜயத்தின் போது, அமெரிக்க அதிபர் ஒபாமாவை நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்தப்பின்னர், இரு தலைவர்களும் வெளியிட்ட கூட்டறிக்கையில், இந்த புதிய கூட்டுறவு முயற்சி, பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து செயல்படுவதை விஸ்தரிப்பது, தகவல் பரிமாற்றம் மற்றும் திறனைக் கட்டியமைப்பது போன்றவற்றை உள்ளடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் சுற்றுப்புறத்தில் நடக்கும் பயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளால் தோற்றுவிக்கப்படும் அச்சுறுத்தல்களைப் பற்றி கவலை தெரிவித்த இந்த இரு தலைவர்களும், பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பைத் தரும் புகலிடங்கள் மற்றும் பதுங்குமிடங்கள் அழிக்கப்படவேண்டியது அவசியம் என்று கூறினர்.

ஆப்கானிஸ்தானின் ஸ்திரத்தன்மை, முன்னேற்றம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றிலும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு தரும் புகலிடங்களை அழிப்பதிலும் இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளப்பட்ட அக்கறை இருப்பதை இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.

பாதுகாப்பு பற்றிய, வழமை சாராத பிற துறைகளான, அமைதிக்காக்கும் பணி, மனித நேய மற்றும் பேரிடர் நிவாரணம், கடல்பகுதிபாதுகாப்பு மற்றும் கடல்வழிப்பாதைகளில் தொடர்பை பாதுகாத்தல் ஆகியவற்றிலும் பரஸ்பர சாதகத்துக்கான பாதுகாப்புக் கூட்டுறவு தற்போது நடத்தப்படும் பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளூடாகவே மேற்கொள்ளப்படும் என்று இந்தக் கூட்டறிக்கை கூறுகிறது.



--------------------------------------------------------------------------------


முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு:ஒரு பார்வை


முன்னாள் பெண் சிறார் போராளிகள் சிலர்
இலங்கை அரசு விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து தான் விடுவித்ததாக கூறும் சிறார் போராளிகளின் மறு வாழ்வு நடவடிக்கைகளில் அடுத்த கட்டமாக அவர்களில் ஒரு தொகுதியினரை கொழும்பு ரட்மலானா இந்து கல்லூரியில் சேர்த்துள்ளது.

இதுவரை இந்த முன்னாள் போராளிகள் அம்பேபூசா, வவுனியா போன்ற முகாம்களில் இருந்து வந்தனர். இலங்கை அரசு தன்னுடைய பாதுகாப்பில் 550 சிறார் போராளிகள் இருப்பதாக கூறுகிறது. இதில் 14 முதல் 18 வயதுடைய 273 பேர் ரத்மலான இந்து கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் கடந்த காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு வகுப்புக்கள் நடத்தப்படுவதாக பள்ளி நிர்வாகம் கூறுகிறது.

அம்பேபூசா முகாமில் இருந்த மாணவர்களுக்கு சிங்கள மொழிக் கல்வி மட்டுமே கிடைத்து இங்கே மாணவர்களுக்கு தமிழ் மொழியில் பாடம் நடத்தப்படுகிறது.


முன்னாள் ஆண் சிறார் போராளிகள் சிலர்
ஆனால் அவர்கள் இன்னமும் மற்ற மாணவர்களுடன் ஒரே வகுப்பரையில் கல்லாமல் தனி வகுப்பரையில்தான் கல்வி கற்கின்றனர்.

எனினும் இந்த நிலைமை விரைவில் மாறும் என்றும் அவர்கள் விரையில் மற்ற மாணவர்களுடன் ஒரே வகுப்பில் கற்க வழி செய்யப்படும் என்கிறார் கல்லூரி முதல்வர் நடராஜா மன்மதராஜா.

இங்கேயிருக்கும் மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்களையும் உறவினர்களையும் சந்திக்க தடையேதுமில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு தொடர்பிலான பெட்டகத்தை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


முகாம் மக்கள் விடுதலை:ஹுயூமன் ரைட்ஸ் வாட்ச் வரவேற்பு


இடைத்தங்கல் முகாம்களில் இருக்கும் மக்கள்
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் காரணமாக இலங்கையின் வடக்கே இடம் பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அனைவரையும் விடுவிப்பது என்ற இலங்கை அரசின் முடிவை அமெரிக்காவின் நீயூயார்க்கை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஹூமன் ரைட்ஸ் வாட்ச் எனும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு வரவேற்றுள்ளது.

அதே ரேம் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சட்டத்துக்குப் புறம்பாக ஆயிரக்கணக்கானோர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு அது கூறியுள்ளது.

டிசம்பர் மாதம் முதல், முகாம்களில் இருக்கும் 1 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு நடமாடும் சுதந்திரம் அளிக்கப்படும் என்றும் இலங்கை அரசு சமீபத்தில் அறிவித்தது.

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சுமார் 11 ஆயிரம் பேர் வேறு பல முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.



--------------------------------------------------------------------------------


யாழ்ப்பாணத்துக்கு இந்தியத் தூதர் விஜயம்

இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டிற்கு இலங்கைக்கான ஐந்து நாடுகளின் தூதுவர்கள் விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகள் குறித்து கண்டறிந்திருக்கின்றார்கள். தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா, தென்கொரியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தூதுவர்களே இவ்வாறு யாழ்ப்பாணத்திற்கு புதன்கிழமை விஜயம் செய்திருக்கின்றார்கள்.

இந்தியத் தூதுவர் அலோக் கே காந்த் தவிர ஏனையோர் யாழ் அரசாங்க அதிபரைச் சந்தித்து யாழ் நிலைமைகள் குறித்து கேட்டறிந்ததுடன், தென்மாராட்சியில் உள்ள இடம்பெயர்ந்தோருக்கான ராமாவில் நலன்புரி நிலையத்தையும் பார்வையிட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களிடம் கலந்துரையாடியுள்ளார்கள்.

இந்தியத் தூதுவர் யாழ் மாநகரசபையில் யாழ் மேயர் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், அங்கு நடைபெற்ற கூட்டத்திலும் உரையாற்றியிருக்கின்றார்.

இந்தியா இலங்கையின் வடபகுதியைக் கட்டியெழுப்புவதற்கும் இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் தயாராக இருப்பதாகவும், இதற்காகவே இந்திய வரவுசெலவுத்திட்டத்தில் 500 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அலோக் கே காந்த் தெரிவித்துள்ளார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter