ஆப்கான் நிலைமை குறித்து இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா கவலை

>> Wednesday, October 28, 2009

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து, ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன.

இன்று பெங்களூரில் நடைபெற்ற ரஷ்யா, இந்தியா மற்றும் சீன வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட, ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜெய் லவ்ரோவ், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் யங் ஜியெசி ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார்கள். இரண்டு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில், பயங்கரவாதம், பருவநிலை மாற்றம், பொருளாதார மந்த நிலை, சுகாதாரம், வேளாண்மை உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

அந்தக் கூட்டத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், சில அமைப்புக்கள் மற்றும் நபர்களுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் தடை விதித்துள்ள நிலையில், அந்த உத்தரவுகளை அனைத்து நாடுகளும் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு சூழ்நிலை மோசமடைந்து வருவது குறித்து அந்த மாநாட்டில் கவலை தெரிவிக்கப்பட்டது. பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பை வலுப்படுத்த, அனைத்து ஐ.நா உறுப்பு நாடுகளும், சர்வதேச பயங்கரவாதத்தை ஒடுக்குவது தொடர்பான நடைமுறைகளுக்கு அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர்கள் கேட்டு்க் கொண்டனர்.

இந்தோனேசியா அகதிகளை கொட்டுவதற்கான இடம் அல்ல என்கிறார் உள்ளூர் மாகாண ஆளுநர்


இந்தோனேசியாவின், இரு வேறு பகுதிகளில் இரு படகுகளில் முன்னூறுக்கும் மேற்பட்ட தஞ்சம் கோரும் இலங்கையர்கள் நிர்கதியாக நிற்கும் நிலையில், ''இந்தோனேசியா அகதிகளைக் கொண்டு கொட்டுவதற்கான இடமல்ல'' என்று அந்நாட்டில் உள்ள ஒரு மகாண ஆளுநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இந்த இரண்டு படகுகளும் ஆஸ்திரேலிய கடற்படையால் தடுக்கப்பட்டன.

இந்தப் பிரச்சனையை தீர்ப்பது தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன.

இதில் 250 க்கும் அதிகமானோர் மேரக் துறைமுகத்தில் உள்ள ஒரு படகில் இருக்கின்றனர். இவர்கள் செவ்வாய்கிழமையன்று ஒரு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.


கம்யூனிஸ்ட் கட்சியின் தலித் ஆதரவுப் பேரணி

பேரணியில் கலந்து கொண்டவர்கள் தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்டப்படவேண்டும் என வலியுறுத்தி இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கியுள்ள தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் இன்று சென்னையில் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.

ஆலயங்களில் தலித் உரிமைகள் நிலை நாட்டப்படவேண்டும், வன்கொடுமைத் தடுப்புசட்டம் சரியாக அமல்படுத்தப்படவேண்டும், அரசு நிலங்கள் தலித் மக்களுக்கு வழங்கப்படவேண்டும், பாதாளச் சாக்கடை அடைப்புக்களை அகற்ற தலித் மக்கள் இறக்கிவிடப்படக்கூடாது, மாறாக இயந்திரங்கள் பயன்படுத்தப்படவேண்டும், தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு 18 இல் இருந்து 19 சதமாக உயர்த்தப்படவேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் பேரணியில் எழுப்பப்பட்டன.

தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சரிடம் கையளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வரதராசன் கோரிக்கைகள் நியாயமானவையே என்று முதல்வர் கருணாநிதி ஒப்புக்கொண்டு, அவையெல்லாம் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்ததாகத் தெரிவித்தார்.

ஆனால் தலித் நிலையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவர் என்றும் வரதராசன் எச்சரித்தார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter