>> Tuesday, October 20, 2009

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக சலுகை நீட்டிப்பில் சிக்கல்
ஐரோப்பிய ஆணையம், இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தகம் செய்ய ஏற்றுமதித் தீர்வையிலிருந்து விலக்கு அளிப்பது போன்ற சலுகைகளைத் தரும் ஜி.எஸ்.பி ப்ளஸ் என்ற திட்டத்தின் கீழ் தொடர்ந்து சலுகைகளைப் பெற தகுதி பெற்றிருக்கிறதா என்பதை ஆராய நியமித்த விசாரணைக்குழு, அதன் விசாரணையை நிறைவு செய்து அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருக்கிறது.
இந்த அறிக்கையில், இலங்கை இந்த ஜி.எஸ்.பி. ப்ளஸ் திட்டத்தின் கீழ் அளித்த உறுதிப்பாடுகளை மீறியிருப்பதாகவும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த சர்வதேச உடன்பாடு, சித்ரவதைக்கெதிரான உடன்பாடு, குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்பாடு ஆகிய மூன்று ஐ.நா. மன்ற மனித உரிமைகள் உடன்பாடுகள் விஷயத்தில் இலங்கையின் செயற்பாடுகளில் குறைகள் காணப்படுவதாகவும் கூறப்பட்டிருக்கிறது.
இந்த அறிக்கையை அடுத்து இலங்கைக்கு ஜி.எஸ்.பி. ப்ளஸ் திட்டத்தின் கீழ் தொடர்ந்து வர்த்தக சலுகைகளை வழங்குவதா அல்லது இந்த திட்டத்திலிருந்து இலங்கை பயன் பெறுவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதா என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுடன் ஆணையம் ஆராயும் என்று ஆணையத்தின் வர்த்தகத்துக்காக பேசவல்ல லூட்ஸ் கூல்னர் ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறார்.
இது குறித்து பிபிசியிடம் பேசிய கூல்னர் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து சரியாக சொல்ல முடியாது என்றார்.
"ஆனால் இந்த கணிப்பு அறிக்கையின் விளைவாக வந்த ஆதாரம் மிகவும் தெளிவாக இருக்கிறது. அதாவது இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் அது. எனவே வர்த்தக சலுகைகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க ஒரு பிரேரணையை, ஆலோசனையை நாங்கள் தயாரித்து சமர்பிப்போம்" என்றார் லூட்ஸ்
இலங்கை இந்த திட்டத்தின் கீழ், ஐரோப்பாவுக்கு ஆயத்த ஆடைகள், மீன் போன்றவற்றை சலுகை அடிப்படையில் ஏற்றுமதி செய்கிறது. இதன் மூலம் கடந்த ஆண்டு மட்டும், சுமார் 1.24 பில்லியன் யூரோக்கள் பெறுமான பொருட்கள் இலங்கையிலிருந்து ஐராப்பிய ஒன்றியத்துக்குள் இறக்குமதி செய்யப்பட்டன. இதன் மீது இறக்குமதி தீர்வை விதித்திருந்தால் அதன் மூலமாக 78 மில்லியன் யூரோக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கிடைத்திருக்கும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்த திட்டம் வளர்முக நாடுகளில் நீடிக்கத்தக்க வளர்ச்சி மற்றும் நல்லாட்சியை ஊக்குவிக்க ஐரோப்பிய ஒன்றியத்தால் உருவாக்கப்பட்ட ஒன்று.
இந்தோனிஷியாவில் தடுத்து வைக்கப்பட்ட கப்பலில் நன்கு அறியப்பட்ட மனித கடத்தல்காரர் உள்ளதாக கூறுகிறது ஆஸ்திரேலியா
தடுத்து வைக்கப்பட்ட கப்பலில் உள்ளவர்கள்
ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்று, இந்தோனேஷிய கடற்பரப்பில் தடுக்கப்பட்ட சுமார் இருநூற்றி ஐம்பதுக்கும் அதிகமான இலங்கையைச்சேர்ந்த தஞ்சம் கோருவோர் இருக்கும் படகில் மிகவும் நன்கு அறியப்பட்ட மனித கடத்தல்காரர் ஒருவர் இருந்ததாக ஆஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கேப்டன் பிராம் என்று அறியப்படும் அந்த நபர், மனித கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றங்கள் தொடர்பில் இந்தோனேஷியாவில் தண்டிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த தஞ்சம் கோருவோரின் கப்பல் தற்போது இந்தோனேஷியாவின் துறைமுகம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. அதில் இருப்பவர்கள் அந்த படகை விட்டு இறங்க மறுத்து வருகிறார்கள். ஆஸ்திரேலிய கடற்பரப்பிற்கு வரும் அகதி தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை இந்த ஆண்டு மிகப்பெரிய அளவு உயர்ந்திருக்கிறது.
காலநிலை மாற்றம் தொடர்பான இந்தியக் கொள்கை மாற்றம் பெறுமா?
கரியமில வாயுவை வெளியிடும் அனல் மின் நிலையம்
புவியின் காலநிலை மாற்றம் தொடர்பில் இந்தியா இதுவரை கடைபிடித்து வரும் கொள்கையை மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அவர்கள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியதாக டைம்ஸ் ஆப் இந்தியா என்கிற இந்திய தினசரி செய்தி வெளியிட்டுள்ளது.
அதாவது காலநிலை பாதிப்புக்கள் தொடர்பில், உலக அளவில் இதுவரை காலமும் வளர்ந்து வரும் நாடுகளின் பக்கம் இருக்கும் இந்தியா, இனிமேல் வளர்ந்துவிட்ட நாடுகள் பக்கம் மாறவேண்டும் என்றும், அது தான் இந்தியாவுக்கு நன்மை பயக்கும் என்றும் இந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாக அந்த நாளிதழின் செய்தி கூறுகிறது.
காலநிலை மாற்றம் தொடர்பில் ஐ.நா.வால் கூட்டப்பட்டிருக்கும் சர்வதேச மாநாடு கோபன்ஹேகனில் டிசம்பர் மாதம் நடக்க இருக்கும் பின்னணியில் இவரது இந்த கடிதம் பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியிருக்கிறது. இந்த கடிதம் குறித்து காலநிலை மாற்றம் தொடர்பிலான செயற்பாட்டாளர் கருணாகரன் அவர்கள் தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்சியில் கேட்கலாம்.
விளையாட்டரங்கம்
ஜென்சன் பட்டன்
பார்முலா 1 அதிவேகக் கார் பந்தய விளையாட்டில் உலக சாம்பியனாக பிரிட்டனின் ஜென்சன் பட்டன் வந்திருக்கிறார். பிரசிலில் நடந்த கிராண்ட் பிரி பந்தயத்தில் பட்டன் இப்பட்டத்தைத் தட்டிச் சென்றார்.
கனடாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 7 ஆட்டங்கள் கொண்ட தொடரை விளையாடிவரும் இந்திய ஹாக்கி அணி, ஐந்தாவது ஆட்டத்தின் முடிவில் 4-0 என்ற முன்னிலைக்கு சென்றிருப்பதன் மூலம் தொடரை வென்றுள்ளது.
சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் கொழும்பில் நடத்திய ஜூனியர் டென்னிஸ் போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த தினேஷ்கந்தன் தங்கராஜா வெற்றிபெற்றுள்ளார்.


இவற்றையும் காண்க
செய்தியறிக்கை
செய்தியரங்கம்
நெஞ்சம் மறப்பதில்லை
தமிழிசை - ஓர் வரலாற்றுப் பார்வை


மின்அஞ்சலாக அனுப்புக

அச்சு வடிவம்







^^ மேலே செல்க


முகப்பு நினைவில் நின்றவை எம்மைப்பற்றி வானிலை


BBC News >> BBC Sport >> BBC Weather >>

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter