>> Saturday, March 12, 2011


2 ஜி விவகாரம் - கனிமொழியிடம் விசாரணை


கனிமொழி
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான கருணாநிதியின் மகள் கனிமொழி, மனைவி தயாளு அம்மாள் ஆகியோரிடம், சிபிஐ எனப்படும் மத்தியப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இன்று வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினார்கள்.
2ஜி எனப்படும் இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக அவர்களிடம் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் இந்த விசாரணை நடத்தப்பட்டது.

மும்பையைச் சேர்ந்த ரியால்டி நிறுவனத்தின் துணை நிறுவனமான ஸ்வான் டெலிகாம், முறைகேடான அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பயனடைந்ததாகவும், அதைத் தொடர்ந்து 214 கோடி ரூபாயை வேறு நிறுவனம் மூலம் கலைஞர் தொலைக்காட்சிக்கு அந் நிறுவனம் வழங்கியதாகவும் புகார் கூறப்பட்டது.

இதுதொடர்பாக, கடந்த மாதம் கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அத்துடன், அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஷரத் குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் 20 சத பங்குகளும், கனிமொழியிடம் 20 சதமும், தயாளு அம்மாளிடம் 60 சத பங்குகளும் உள்ளன.

பின்னர், கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், 214 கோடி ரூபாய், டி. பி. குரூப் நிறுவனமான சினியூக் பிலிமஸிடமிருந்து பங்குகள் பரிவர்த்தனைக்காக 214 கோடி ரூபாய் முன்பணமாகப் பெறப்பட்டதாகவும், ஆனால் பங்கு விலையில் ஏற்பட்ட முரண்பாட்டால் அந்தத் தொகை, வட்டியுடன் திருப்பித் தரப்பட்டதாகவும், அது வருமான வரித்துறைக்கும் தெரியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந் நிலையில், அடுத்ததாக, கனிமொழியிடம் விசாரண நடக்கும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. அதன்படி, இன்று விசாரணை நடைபெற்றது. ஆனால், தயாளு அம்மாளிடம் விசாரணை நடைபெறுமா என்று சந்தேகம் நிலவி வந்த நிலையில், அவரிடமும் சிபிஐ விசாரணை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே, திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டி.பி. குரூப் நிறுவனத்தைச் சேர்ந்த ஷாகித் பல்வாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்றைய விசாரணை குறித்து, செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த கனிமொழி, ஏற்கெனவே கலைஞர் தொலைக்காட்சி மேலாண்மை இயக்குநர் ஷரத்குமார் தெரிவித்த தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் தன்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் அனைத்து விவரங்களையும் தெரிவித்ததாகவும் கூறினார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter