>> Tuesday, February 8, 2011


'வீடு திரும்புமாறு எம்மை நிர்ப்பந்தித்தனர்'


இடம்பெயர்ந்தவர்கள் முறைப்பாடு
கிழக்கு மாகாணத்தில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிய பல குடும்பங்கள் பலவந்தமாக வீடுகளுக்குத் திருப்பியனுப்பப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இதற்கிடையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 65 சத வீதமான குடும்பங்கள் தமது வீடுகளுக்கு திரும்பிவிட்டதாகவும் நலன்புரி முகாம்களின் எண்ணிக்கை 197 இலிருந்து தற்போது 101 ஆக குறைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளம் வடிந்துவரும் நிலையிலேயே இந்தக் குடும்பங்கள் தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றபோதிலும், தாம் விருப்பததிற்கு மாறாக எவ்வித நிவாரண உதவிகளுமின்றி வீடு திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டதாக சில குடும்பங்கள் கூறுகின்றன.

வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள கண்ணன் கிராமம் ,கண்ணகிபுரம் மற்றும் யுனியன் கொலனி ஆகிய கிராம மக்கள் பாடசாலைக் கட்டிடமொன்றில் தஞ்சமடைந்திருந்தபோது அதற்கு பொறுப்பான அதிகாரிகளினால் தாம் வீடு செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டடதாக மக்கள் சிலர் தமிழோசை செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.

தங்கள் வீடுகளிலும் ,காணிகளிலும் இன்னமும் வெள்ள நீர் தேங்கி நிற்பதால் அங்கு தங்கியிருக்க முடியாத நிலையே இன்னமும் காணப்படுவதாகவும் மக்கள் கூறுகின்றார்கள்.


வெள்ளத்தில் மக்கள் அவதி
இது தொடர்பாக வினவிய போது தமிழோசைக்குப் பதிலளித்த மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வீடுகளுக்கு திரும்ப முடியாதவர்கள் தொடர்ந்தும் நலன்புரி முகாம்களில் தங்கியிருக்க முடியும் எனவும் குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதியின் பிரதேச செயலாளரிடம் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

கிழக்கு மாகாணத்தில் வெள்ள நிலமை காரணமாக பிரதேசத்தின் பாடசாலைகள் எதிர்வரும் புதன் கிழமை வரை மூடப்பட்டுள்ளதுடன் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளன.

மட்டக்களப்பிலிருந்து துர இடங்களுக்கான தரைவழிப் போக்குவரத்து சேவைகள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ள போதிலும் உள்ளுரில் சில இடங்களில் இன்னமும் தரை வழிப் போக்குவரத்து தடைப்பட்ட நிலையே காணப்படுகின்றது.

இதற்கிடையே, மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக தாழ்ந்த பிரதேசங்களில் தொடர்ந்தும் வெள்ளம் தேங்கியிருக்கின்றது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter