>> Monday, February 7, 2011


வெள்ளத்தால் மன்னார் கடும் பாதிப்பு


வெள்ளத்தால் கடும் பாதிப்பு
இலங்கையின் வடக்கே, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் வெள்ள நிலைமைகளில் முன்னேற்றம் காணப்படாத அதேவேளை, மன்னார் மாவட்டத்தில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

மன்னார் மாவட்டத்தின் அயல் மாவட்டமாகிய அனுராதபுரம் மாவட்டத்தில் பெய்யும் கடும் மழை காரணமாக அங்குள்ள குளங்கள் யாவும் நிறைந்து வழிவதுடன் அவற்றின் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுவதனால் மன்னார் மாவட்டத்தின் தென்பகுதியில் அபாயகரமான வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நீரை ஏந்தி வருகின்ற அருவியாற்றின் நீர் மட்டம் வரலாறு காணாத வகையில் 22 அடி உயர்ந்திருப்பதனால் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

வெள்ள அபாயத்திலிருந்து நானாட்டான், முசலி பிரதேசங்களில் அருவியாற்றின் கரைகளில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களைப் பாதுகாப்பதற்காக அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் 2800 பேர் மன்னார் நகரத்தில் உள்ள 6 பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மடு உட்பட வேறு இடங்களுக்கும் மக்கள் பாதுகாப்பிற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

நானாட்டான் பகுதிக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை அவதானித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வெள்ள அபாயம் குறித்து மக்கள் அங்கு பெரும் அச்சமடைந்துள்ளதாகவும். நிலைமை மேலும் மோசமடையும் பட்சத்தில் இங்குள்ள மக்களை பாதுகாப்பான வேறிடத்திற்கு அழைத்துச் செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பதாக் கூறினார்.

அருவியாற்றின் வெள்ள நீர் மட்டம் அரையடி குறைந்துள்ளதாகவும் மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை என்றும் வவுனியா பிராந்திய நீர்ப்பாசனப் பணிப்பாளர் குமாரவேலு சிவபாலசுந்தரம் கூறியுள்ளார்.

அருவியாற்றின் ஒரு பகுதி வெள்ளம் வவுனியா மன்னார் வீதியில் கட்டையடம்பன் பகுதியில் குறுக்கறுத்து உயரமாகப் பாய்வதனால் இந்த வீதியின் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

மதவாச்சி பகுதியில் ஏ9 வீதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள போதிலும், வவுனியா மாவட்டத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் மாற்று வீதிவழியாகக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அனுராதபுரத்தில் இருந்து ரயில் மூலமாகப் போதிய எரிபொருளும் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் வவுனியா அரச அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter