>> Friday, August 28, 2009

செய்தியரங்கம்

போக்ரன் அணுச்சோதனை நடத்தப்பட்ட இடம்
தமிழோசை
அணுச் சோதனை தோல்வி என்ற இந்திய விஞ்ஞானியின் கருத்தால் சர்ச்சை
இந்தியா 1998 ஆம் ஆண்டு நடத்திய அணுகுண்டு சோதனை முழு வெற்றி அடையவில்லை என்று அந்த சோதனையில் ஈடுபட்ட விஞ்ஞானிகளில் ஒருவரான கே. சந்தானம் தெரிவித்த கருத்தையடுத்து, இந்தியாவின் அணுசக்தித் திறன் தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
அணுசக்திப் பரவல் தடை ஒப்பந்தம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசும்போது, சந்தானம் இந்தக் கருத்தை வெளியிட்டார். கடந்த 1998 ஆம் ஆண்டு வாஜபேயி பிரதமராக இருந்தபோது போக்ரானில் நடத்தப்பட்ட இரண்டாவது அணுகுண்டு சோதனையில், டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் பிரதிநிதியாக அவரும் கலந்துகொண்டார்.
அந்த அணுகுண்டு சோதனை முழு வெற்றியடையாத நிலையில், இந்தியா மேலும் அணுகுண்டு சோதனைகளை நடத்த வேண்டும் என்றும், அவசரப்பட்டு, சிடிபிடி ஒப்பந்தத்தில் கையெழுத்திடக்கூடாது என்றும் சந்தானம் வலியுறுத்தியுள்ளார்.
போக்ரன் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டு 11 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்று அவரிடம் கேட்டபோது, ``அணுப்பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று இந்தியாவின் மீது நிர்ப்பந்தம் அதிகரித்து வருகிறது. அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், அதன்பிறகு அணுகுண்டு சோதனை நடத்துவதற்கான வாய்ப்புக்கள் முற்றிலும் அடைக்கப்படும். அதனால், தற்போதுள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி இந்தியா இரண்டு அல்லது மூன்று அணுகுண்டு சோதனைகளை நடத்தி, தனது அணுத்திறனை அதிகரித்துக் கொள்ள வேண்டும்’’ என்றார் விஞ்ஞானி சந்தானம்.
ஆனால், இந்திய அரசு சந்தானத்தின் கருத்தை ஏற்கவில்லை. உள்துறை அமைச்சர் சிதம்பரம் இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கும்போது, சந்தானத்தின் கருத்தைக் கேட்டு தான் குழப்பமடைந்ததாகத் தெரிவித்தார்.
அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டபோது, டிஆர்டிஓ அமைப்பின் தலைவராக இருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், சந்தானத்தின் கருத்தை மறுத்திருக்கிறார். போக்ரான் அணுகுண்டு சோதனையில் தேவையான முடிவு கிடைத்ததாக அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
'இலங்கை போர்க் குற்றம் குறித்து ஆராய சர்வதேச விசாரணை தேவை'- ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்
இலங்கை இராணுவத்தினர்இலங்கை படையினர் என்று கூறப்படுபவர்களால், தடுத்து வைக்கப்பட்டிருந்த சிலர் கொல்லப்படுவதாக குற்றஞ்சாட்டி அண்மையில் வெளியாகியிருக்கின்ற வீடியோ காட்சிகள், இலங்கையில் இடம்பெற்றிருக்கக் கூடிய போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச ஆணைக்குழு ஒன்றின் விசாரணை அவசியம் என்பதை கோடி காட்டுவதாக, ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கூறியிருக்கிறது.
கடந்த பல வருடங்களாக தொடர்ந்த இரு தரப்புக்கும் இடையிலான போரின் போது இரு தரப்பினாலும், போர் சட்டங்கள் மீறப்பட்டதாக முறைப்பாடுகள் பல வந்தாலும், அங்கு சுயாதீன கண்காணிப்பாளர்கள் எவரும் செல்ல அனுமதிக்கப்படாத நிலை காரணமாக அவை குறித்த உறுதியான தகவல்களை பெறமுடியாது இருந்து வந்துள்ளது என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
ஆகவே இரத்தக்களரி மிகுந்த இலங்கை போரில் இடம்பெற்ற குற்றங்கள் குறித்து ஆராய சுயாதீனமான சர்வதேச விசாரணை ஆணையம் ஒன்று தேவை என்றும் அது வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையே, ஊடகங்களில் வெளியான இந்த வீடியோ ஒளிக்கீற்று போலியானது என்று மீண்டும் மறுத்திருக்கின்ற இலங்கை அரசாங்கம், இது குறித்த செய்தியை முதலில் வெளியிட்ட ''சானல் 4'' நிறுவனத்துக்கு எதிராக பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்யப்ப்போவதாக கூறியுள்ளது.
இது குறித்து இராஜதந்திர ரீதியிலான முறையான கண்டனத்தை பிரித்தானிய அரசாங்கத்திடம் தெரிவிக்கவிருப்பதாக இலங்கையின் அமைச்சரவைப் பேச்சாளரான அநுர பிரிய தர்சன யாப்பா அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கரியமில வாயுவை அகற்றும் செயற்கை மரங்கள்
காபன் வெளியெற்றம் அதிகம் உள்ள இடங்களில் இந்த செயற்கை மரங்களை நடலாம்காற்றில் கலந்துள்ள கரியமில வாயுவைக் குறைப்பதற்கான தொழில்நுட்ப வாய்ப்பு வழிகள் குறித்து பிரிட்டனில் நடந்த ஓர் மீளாய்வில், கரியமில வாயுவை காற்றிலிருந்து உறிஞ்சி உள்வாங்கிக்கொள்ளும் செயற்கை மரங்கள் என்ற புதிய கண்டுபிடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஏனைய சில யோசனைகளைவிட செலவு குறைவானதாகவும் செயல்பாட்டுச் சாத்தியம் அதிகம் கொண்டதாகவும் இந்தத் தொழில்நுட்பம் அமைந்துள்ளது.
சூரிய ஒளியை திசை திருப்புவதற்கான பிரம்மாண்ட கண்ணாடிகளை விண்வெளியில் நிறுவுவது போன்ற யோசனைகளை யதார்த்தத்துக்கு ஒத்துவராதவை என்று கூறி பிரிட்டனின் இயந்திரப் பொறியியல் வல்லுநர்களின் அமைப்பு நிராகரித்துள்ளது.
ஆனால் இருபதாயிரம் டாலர்கள் செலவில் உருவாக்கப்படக்கூடிய இந்த செயற்கை மரம் ஒன்று, இருபது கார்கள் வெளியேற்றக்கூடிய அளவிலான கரியமிலவாயுவை காற்றுமண்டலத்தில் இருந்து அகற்றும் திறன் பெற்றிருக்கும் என்று தெரிகிறது.
இவை குறித்த மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இவற்றையும் காண்க
செய்தியறிக்கை
செய்தியரங்கம்
முற்றுப் பெற்றது மும்பை மோதல்
நெஞ்சம் மறப்பதில்லை

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter