>> Tuesday, September 8, 2009

இலங்கை தோட்டத்தொழிலாளர் சம்பளப் பேச்சுவார்த்தை தோல்வி
இலங்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளக் கோரிக்கை தொடர்பாக தொழிற்சங்கங்களுக்கும், முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், தாம் தற்போது நடத்திவரும் ஒத்துழையாமை இயக்கத்தை தீவிரமாக்குவதுடன், மேலும் வேறு வழிகளிலும் போராட்டங்களை நடத்துவது குறித்து ஆலோசிக்கப் போவதாகவும் அவை கூறுகின்றன.
இலங்கையின் மத்திய மலையகப் பகுதிகளில் உள்ள பெருந்தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளத்தை 500 ரூபாவாக அதிகரிக்குமாறு தொழிற்சங்கங்கள் கோரியிருந்தன.
இது தொடர்பாக பல சுற்றுக்கள் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டன. ஆயினும் அவை இதுவரை தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன.
அந்த நிலையில் இன்றும் இரு தரப்புக்கும் இடையில் பேச்சுக்கள் நடந்தன. ஆனால், தொழிலாளர்களுக்கு 360 ரூபா மாத்திரம் தினசரி சம்பளமாகத்தரவே முதலாளிமார் உடன்பட்டதால், அவர்களுடனான பேச்சுக்களை முறித்துக்கொண்டு தாம் வெளியேறியதாக, இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த வேலாயுதம் தமிழோசையிடம் தெரிவித்தார்.
இவை குறித்த மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
த.தே. கூட்டமைப்பினர்- ஜனாதிபதி மஹிந்த சந்திப்பு
இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் இன்று மாலை சந்தித்துப் பேசியுள்ளனர்.
வடகிழக்கில் உள்ள பல பிரச்சினைகள் குறித்து, குறிப்பாக இடம்பெயர்ந்தோர் முகாம்களில் காணப்படுகின்ற பல பிரச்சினைகள் குறித்து இலங்கை ஜனாதிபதியிடம் தாம் விபரித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
இடம்பெயர்ந்தவர்களை, விரைவாக அவர்களது இருப்பிடங்களில் மீளக்குடியமர்த்துவது குறித்தும் தாம் கலந்தாலோசித்ததாகவும் அவர் கூறினார்.
இவை குறித்து சம்பந்தர் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
காஞ்சிவரம் திரைப்படத்துக்கு இந்திய தேசிய விருது
இந்தியாவில் சுதந்திரத்துக்கு முற்பட்ட காலத்தில் நெசவுத் தொழிலாளர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் ''காஞ்சிவரம்'' என்னும் தமிழ் திரைப்படத்துக்கு இந்திய அரசின் தேசிய விருது கிடைத்திருக்கிறது.
இதனை பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் முக்கிய வேடமேற்று நடித்த, நடிகர் பிரகாஷ்ராஜுக்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்திருக்கிறது.
இவை குறித்து பிரபல தமிழ் திரைப்பட விமர்சகர் தியோடர் பாஸ்கர் மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் ஆகியோர் பிபிசிக்கு வழங்கிய கருத்துக்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
ஸ்திரமடையும் அமெரிக்க வீட்டுச் சந்தை
அமெரிக்க வீட்டுச் சந்தையில் ஏற்பட்ட நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இரு பெரிய நிதி நிறுவனங்களான ஃபன்னி மே மற்றும் ஃபிரடி மக் ஆகிய நிறுவனங்களை காப்பாற்ற அமெரிக்க அரசாங்கம் ஒரு வருடத்துக்கு முன்னதாக அந்த துறையில் 200 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ததுடன் அந்தத் துறையை ஒழுங்குபடுத்துவதற்கான நிறுவனம் ஒன்றையும் ஏற்படுத்தியது.
அதன் காரணமாக அந்த இரு நிறுவனங்களும் இன்னமும் வீட்டுக் கடன் சந்தையில் தேறி நிற்பதுடன், அந்த வீட்டுச் சந்தையு ஸ்திரமடைந்து வருவதாக சமிக்ஞைகள் தென்படுகின்றன்.
ஆயினும், அந்த இரு நிறுவனங்களை காப்பாற்றுவதற்கு எடுக்கப்பட்ட அந்த நடவடிக்கைகளை விமர்சிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இவை குறித்து ஆராயும் செய்தி அலசல் ஒன்றை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


இவற்றையும் காண்க
செய்தியறிக்கை
செய்தியரங்கம்
முற்றுப் பெற்றது மும்பை மோதல்
நெஞ்சம் மறப்பதில்லை


மின்அஞ்சலாக அனுப்புக

அச்சு வடிவம்

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter