>> Saturday, August 1, 2009

செய்தியரங்கம்

இலங்கையின் வடகடலில் மீன்பிடி தொழில் மீதான தடைகள் விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கின்ற போதிலும் பிரச்சினைகள் தொடர்கின்றன
தமிழோசை
வடகடலில் தொடரும் மீனவர் பிரச்சினைகள்
இலங்கையின் வடகடலில் மீன்பிடி தொழில் மீதான தடைகள் அரசாங்கத்தினால் விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கின்ற போதிலும் அங்குள்ள மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் வருகை, பிடிக்கப்படுகின்ற மீன்களைச் சந்தைப் படுத்துவதற்குரிய சீரான ஏற்பாடுகளின்மை போன்றவற்றினால் தமது மீன்பிடி தொழில் முழுமையான வருமானத்தைத் தரக்கூடியதாக இல்லை என்கிறார் வடமராட்சி வடக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவரும் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் சங்கங்களின் சம்மேளன உபதலைவருமாகிய அந்தோனிப்பிள்ளை எமிலியான்பிள்ளை அவர்கள்.
வட கடலில் மீன்பிடிப்பதற்காக வருகின்ற தென்பகுதி மீனவர்களினால் தமது பிரதேச மீனவர்கள் தாக்கப்பட்டுள்ள சம்பவங்களும் இடம்பெற்றிருப்பதாக வடமராட்சி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக பொலிசார், இராணுவத்தினர் மட்டுமல்லாமல், சமூக சேவைகள் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
கொழும்பில் தமிழ்க் கைதிகள் உண்ணாவிரத போராட்டம்
சிறைக்கம்பிகளுக்குப் பின் பட்டினிப்போர்
கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இருநூறுக்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் தடுப்புக் காவல் உத்தரவில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தம்மை விடுதலை செய்ய வேண்டும், அல்லது பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும், வழக்கு தொடரப்பட்டால் தத்தமது பிரதேச நீதிமன்றங்களுக்கு மாற்றப்படவேண்டும் அல்லது தமக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து விரைவாக விசாரணை நடத்தி நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜரபடுத்த வேண்டும் என மூன்று தினங்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்க் கைதிகள் தெரிவித்துள்ளனர்.
யானைக்குட்டிகளை தாயிடமிருந்து பிரிப்பதற்கு எதிராக இலங்கையில் வழக்கு
யானைகளின் துயரம்
மூன்று வயதான இரண்டு யானைக்குட்டிகளை தாயிடமிருந்து பிரித்து வேறிடமொன்றுக்கு கொண்டு செல்வது மிருகங்களை வதை செய்யும் நடவடிக்கையென்று கூறி அடிப்படை உரிமை மனுவொன்று கொழும்பு உயர்நீதிமன்றத்தில் தாக்குல் செய்யப்பட்டுள்ளது.
கேகாலை பின்னவலை யானைகள் காப்பகத்தில் இருந்த இந்த யானைக்குட்டிகளை கண்டி தலதா மாளிகைக்கு அன்பளிப்பு செய்வது என்ற அமைச்சரவையின் அண்மைய தீர்மானம் நாட்டின் அரசியலமைப்பு ஒழுங்கு விதிகளுக்கு முரணானது என மிருகங்களின் நலன் பேணும் அரசசார்பற்ற நிறுவனமொன்று மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் இந்த யானைக்குட்டிகளை எந்த நிர்ப்பந்தத்திலும் மீள ஒப்படைக்க அனுமதிக்கப்பட மாட்டாது என இந்த விவகாரங்களுக்கு பொறுப்பான விளையாட்டுத் துறை அமைச்சர் காமினி லொக்குகே கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் நான்கில் ஒரு பகுதி மக்களுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை என்று இந்தியாவின் தன்னார்வ தொண்டு நிறுவனம் அறிக்கை
போஷாக்கின்மை பிரச்சினை
நவதானிய அறக்கட்டளை என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இந்தியா உலகின் பட்டினி மற்றும் போஷாக்கின்மையின் மையமாக மாறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, ஆப்ரிக்க துணைக்கண்டத்தில் உள்ளவர்களைவிட, இந்தியாவில் பட்டினியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக அந்த அறக்கட்டளையின் தலைவரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான வந்தனா சிவா தெரிவித்துள்ளார்.
ஆனால், மக்கள் தொகை ஆண்டுக்கு 18 மில்லியன் அதிகரிக்கும் அதே நேரத்தில், நாட்டின் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. அனைத்து மக்களுக்கும் போதிய அளவு உணவு கிடைப்பதை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசு கூறி வருகிறது.
இந்தியாவில் 57 லட்சம் குழந்தைகள் போஷாக்கின்மை காரணமாக, சராசரி எடையை விட குறைவான எடையுடன் உள்ளதாக வந்தனா சிவா தெரிவித்துள்ளார்.
மொத்த உணவு உற்பத்தியைப் பற்றி அதிகமாகப் பேசப்படுகிறது. ஆனால், கடந்த 1991-ம் ஆண்டு தாராளமாயப் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபோது, இந்தியாவில் தனி நபருக்குக் கிடைத்து வந்த உணவு, 2001-ம் ஆண்டில் 150 கிலோவாகக் குறைந்துவிட்டது என்று வந்தனா சுட்டிக்காட்டினார்.
மேலும், உணவு உற்பத்தி அளவும் பெருமளவு குறைந்துவிட்டதாகவும், விவசாயிகளும் தங்கள் விளை நிலங்களை வேறுபயன்பாடுகளுக்குக் கொடுத்து வருவதும் ஒரு காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஐ.நா. மன்றத்தின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வெளியிட்ட ஆய்வின் அடிப்படையில் தங்கள் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக வந்தனா சிவா தெரிவித்தார். மேலும் இந்தியாவின் மத்தியப் பகுதியில் உள்ள புண்டேல்கண்ட் பிராந்தியத்தில் தங்கள் அமைப்பு நடத்திய ஆய்வில், 90 சதம் குடும்பங்களுக்கு போதிய அளவு உணவு கிடைப்பதில்லை என்று தெரியவந்துள்ளதாகக் கூறினார்.


இவற்றையும் காண்க
செய்தியறிக்கை
செய்தியரங்கம்
முற்றுப் பெற்றது மும்பை மோதல்
நெஞ்சம் மறப்பதில்லை


மின்அஞ்சலாக அனுப்புக

அச்சு வடிவம்







^^ மேலே செல்க


முகப்பு நினைவில் நின்றவை எம்மைப்பற்றி வானிலை


BBC News >> BBC Sport >> BBC Weather >> BBC World Service >> BBC Languages >>

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter