>> Tuesday, May 14, 2013
நம்பிக்கை: நுளம்புகளுக்கே மலேரியா எதிர்ப்புச் சக்தியை ஊட்டிவிட்டால்!
நுளம்புகளிடத்தில் ஒருவகை பக்டீரியா கிருமிகளை தொற்றச்செய்து, அதன்மூலம் அந்த நுளம்புகளுக்கு மலேரியா -எதிர்ப்புச் சக்தியை அளிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
விஞ்ஞானிகள் இதற்காக கண்டறிந்துள்ள பக்டீரியா வகையொன்றை நுளம்புகளிடத்தில் தொற்றச்செய்த போது, நுளம்புகளிடத்தில் ஏற்கனவே காணப்பட்ட மலேரியா நோய்க்கிருமிகளுக்கு (பராசைட் ஒட்டுண்ணிகள்) உயிர்வாழ முடியாது போனமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த நுளம்புகளிடத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதன்மூலம் மனிதர்களை மலேரியா தாக்குவதை குறைக்க முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.நுளம்புகள் மூலமே மலேரியா நோய்க்கிருமிகள் மனிதர்களிடத்தில் பரவுகிறது.
வால்பாச்சியா பக்டீரியம்(Wolbachia bacterium) என்ற பக்டீரியா வகை, பொதுவாக பூச்சி வகைகளைத் தாக்குவது வழக்கம்.
ஆனால், மலேரியாவை பரப்பும் அனோபிலிஸ் நுளம்புகளிடத்தில் இயற்கையாக இந்த Wolbachia பக்டீரியா தொற்று காணப்படுவதில்லை.
இதனால், இந்த வகை பக்டீரியாக்களை அனோபிலிஸ் நுளம்புகளிடத்தில் தொற்றச்செய்த போது, மலேரியா கிருமிகள் உயிர்வாழச் சிரமப்பட்டதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இதேவகையான அணுகுமுறை சில நாடுகளில் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தியிருக்கிறது.
மலேரியாவிலும் இந்தமுறையை சாத்தியப்படுத்துவதற்கு மேலும் ஆராய்ச்சிகள் தேவைப்படுவதாக இந்த ஆய்வில் ஈடுபட்ட மிச்சிகன் அரச பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உலகளவில் பரவிவரும் நோயாக மலேரியா காணப்படுகிறது.
உலகில் 22 கோடிப்பேர் மலேரியாவில் பீடிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு 6 லட்சத்து 60 ஆயிரம் பேர் மலேரியாவுக்கு பலியாகின்றனர்.
0 comments:
Post a Comment