>> Friday, May 17, 2013


'வவுனியாவில் 7 வயது மாணவி பாலியல் பலாத்காரம்'



வவுனியா வடக்கு நெடுங்கேணி சேனைப்பிலவைச் சேர்ந்த 7 வயதுடைய மாணவியொருவர் அடையாளம் தெரியாதவர்களினால் பாலியல் குற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, சேனைப்பிலவு மாணவர்கள் வகுப்புக்களைப் பகிஸ்கரித்துள்ளனர்.
ஊர் மக்களும் கூடி, பாடசாலையைத் திறக்கவிடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் குற்றச்சம்பவம் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து, கூடியிருந்த பொதுமக்களைக் கலைந்து போகச் செய்துள்ளனர். இந்தப் போராட்டம் காலை 3 மணித்தியாலங்கள் நீடித்ததாகவும், போராட்டம் காரணமாகவும், மாணவர்களின் பகிஸ்கரிப்பு காரணமாகவும் பாடசாலை வியாழனன்று செயற்படவில்லை என்றும் தெரியவருகிறது.

செவ்வாயன்று பாடசாலை முடிந்து வீடு சென்றவேளை, 7 வயது சிறுமியொருவரை அடையாளம் தெரியாதவர்கள் கடத்திச் சென்று காட்டுப்பாங்கான காணியொன்றில் பாழடைந்த கிணற்றருகில் அவர் மீது பாலியல் குற்றம் புரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பாழடைந்த கிணற்றைச் சுத்தம் செய்வதற்காகச் சென்றவர்கள் பற்றைகளை வெட்டிக்கொண்டிருந்தபோது, மாலை நாலரை மணியளவில் சிறுமியின் முனகல் சத்தம் கேட்டு, அவரைக் கண்டுபிடித்திருக்கின்றனர். சட்டையில் இரத்தம் தோய்ந்த நிலையிலும் வாயிலிருந்து இரத்தம் பெருக்கெடுத்த நிலையிலும், கீறல் காயங்களுடனும் கண்டு பிடிக்கப்பட்ட சிறுமி நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
'பொலிஸ்காரர் மீது சந்தேகம்'
இந்த விடயம் தொடர்பாக மாங்குளம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருடன் தொடர்பு கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இது விடயத்தில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுவதாகவும், இதனால் மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டிருப்பதாகவும் எனவே, குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.

இதுதொடர்பில் விசேட குழு அமைத்து, நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தன்னிடம் மாங்குளம் எஸ்.எஸ்.பி சம்பிக்க சிறிவர்தன உறுதியளித்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter