>> Thursday, May 16, 2013
டில்லி வல்லுறவு - குற்றம் சாட்டப்பட்டவர் மருத்துவமனையில்
புது டில்லியில் கடந்த ஆண்டு ஒடும் பேருந்தில் மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டுத்தப்பட்டு, கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் சிறையில் தாக்கப்பட்டதாகவும் அவருக்கு உணவில் விஷம் வைக்கப்பட்டதாகவும் அவரின் வழக்கறிஞர் குற்றம் சாட்டுகிறார்.
ஆனால், இக்குற்றச்சாட்டை சிறை நிர்வாகம் மறுத்துள்ளது.
இந்தியா முழுவதும் கோப அலைகளைத் தோற்றுவித்த டில்லி பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான 20 வயதான வினய் சர்மா சக கைதிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் தற்போது அவர் லோக்நாயக் ஜெய்பிரகாஷ் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் வழக்கறிஞர் ஏ பி சிங் கூறியுள்ளார்.
திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வினய் சர்மாவின் உணவில் அதிகாரிகள் விஷத்தை கலந்து கொடுத்துள்ளதாகவும் அவரின் வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார். வினய் சர்மா ரத்த வாந்தி எடுப்பதாகவும், காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளால் அவதியுறுவதாகவும் தெரிவித்துள்ள்ள ஏ பி சிங், இருந்தும் மருத்துவர்கள் அவரைக் காப்பாற்றிவிடுவார்கள் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சம்மந்தப்பட்ட நபரின் உடல் நிலை குறித்து மருத்துவர்கள் அதிகாரபூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை. வினய் சர்மா ஆபத்தான நிலையில் செவ்வாய்க்கிழமை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாக பெயர் வெளியிட விரும்பாத மருத்துவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தற்போது அவர் அபாயக் கட்டத்தில் இருந்து மீண்டு விட்டதாகவும் அவர்கள் கூறினர். மருத்துவமனையின் பொதுப் பிரிவில் இருக்கும் அவரை சந்திக்க ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
மறுப்பு
விஷம் கலந்த உணவால் வினய் சர்மா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது தவறு என்று கூறியுள்ள திகார் சிறை நிர்வாகம், அவர் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
டில்லி பாலியல் தாக்குதல் வழக்கு தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் மைனர் என்பதால் அவர் மீது சிறார் சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சம்மந்தப்பட்ட பேருந்தை ஒட்டிய 33 வயதான ராம் சிங் கடந்த மார்ச் மாதம் 11 ஆம் தேதியன்று அவர் அடைக்கப்பட்டிருந்த சிறையில் தூக்கு மாட்டி இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவரின் குடும்பத்தினரோ அவர் சித்ரவதை செய்யப்பட்டதாகவும் சக கைதிகளால் தாக்கப்பட்டதாகவும் புகார் கூறினர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதியன்று இரவு துணை மருத்துவம் படித்து வந்த 23 வயதுப் பெண் ஒடும் பேருந்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை டில்லியில் பெரிய அளவிலான போராட்டங்களை தோற்றுவித்தது.
மருத்துவமனையில் 13 நாட்கள் கடுமையாக உயிருக்குப் போராடிய அந்தப் பெண் இறுதியில் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். அங்கே அவர் இறந்துபோனார்.
0 comments:
Post a Comment