>> Saturday, May 18, 2013


கிரிக்கெட் சூதாட்டம்: சென்னையில் ஆறு பேர் கைது


ஐபிஎல்லில் முன்நிர்ணய முறைகேடு குற்றச்சாட்டுகள் வந்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
ஐபிஎல்லில் முன்நிர்ணய முறைகேடு குற்றச்சாட்டுகள் வந்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
ஐபிஎல் உள்ளிட்ட அனைத்துவிதமான கிரிக்கெட் ஆட்டங்கள் மீதும் பந்தயம் கட்டும் சூதாட்டத்தில் பணமோசடி செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சென்னை காவல்துறையினர் ஆறு பேரை வெள்ளியன்று கைது செய்துள்ளனர்.
ஸ்பாட் பிக்ஸிங் முறையில் பந்துவீசுவதற்கு கிரிக்கெட் சூதாட்ட முகவர்களுக்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், பிரபல கிரிக்கெட் ஆட்டக்காரர் ஸ்ரீஷாந்த் உட்பட ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் அன்கித் சவான், அஜித் சந்திலா ஆகியோரை வியாழனன்று தில்லி காவல்துறையினர் கைது செய்தனர். சூதாட்ட முகவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டு மற்றொரு 11 பேரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
அந்த பரபரப்பு தொடரும் நிலையில், தமிழக தலைநகர் சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் பணம் கட்டியவர்களுக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றிய குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆறுபேரை தாங்கள் கைது செய்திருப்பதாக சென்னை காவல்துறையினர் வெள்ளியன்று அறிவித்தனர்.
நாடெங்கிலும் ஒரு வலயமைப்பாக செயல்படும் பந்தயம் கட்டும் சூதாட்டக் கும்பல் ஒன்றைச் சேர்ந்தவர்கள் இவர்கள் என்று ஆரம்பகட்ட விசாரணைகள் காட்டுவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் மொத்தம் பதிமூன்று இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாகவும், பதினான்கு லட்சம் ரொக்கப்பணம், பந்தய சூதாட்டம் பற்றிய தரவுகள் அடங்கிய கணினிகள், கைத்தொலைபேசிகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், தங்களுக்கு இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என்றும் சென்னை காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
இதேவேளை, நேற்று டில்லியில் கைது செய்யப்பட்ட கிரிக்கெட்வீரர்கள் தாங்கள் இந்த சூதாட்ட நடவடிக்கைகளில் சில தரகர்களால் ஈர்க்கப்பட்டு விட்டதாகவும், இந்த விவகாரத்தில் தங்களின் பங்கு குறித்து அவர்கள் ஒப்புதல் வாக்குமூலங்கள் அளித்திருப்பதாகவும் டில்லி காவல்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
ஆனால் இந்த ஊடகச் செய்திகள் தவறு என்று ஸ்ரீஷாந்த்தின் வழக்கறிஞர் தீபக் பிரகாஷ் மறுத்திருக்கிறார். ஸ்ரீஷாந்த் காவல்துறையிடம் எந்த ஒப்புதல் வாக்குமூலத்தையும் அளிக்கவில்லை என்றும் ஸ்ரீஷாந்த் மீதான வழக்குக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்றும் அவர் பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
தமது கட்சிக்காரர் மீதான புகார்கள் எல்லாமே முழுக்க முழுக்க ஆதாரமற்றவை என்றும் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு சட்டரீதியில் ஏற்கத்தக்க சாட்சியம் எதையும் காவல்துறையினர் இதுவரை காட்டவில்லை என்றும் கூறிய தீபக் பிரசாத், தொலைபேசி பேச்சுக்கள், பணபரிவர்த்தனை இப்படி எதற்கும் ஸ்ரீஷாந்த்தை நேரடியாக தொடர்பு படுத்தக்கூடிய ஆதாரம் எதையுமே இதுவரை காவல்துறை காட்டாத நிலையில் முழுக்க முழுக்க அப்பாவியான தமது கட்சிக்காரர் தவறுதலாக கைது செய்யப்பட்டிருப்பதை நினைத்து மிகுந்த வேதனையில் இருப்பதாகவும் கூறினார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter