>> Tuesday, May 14, 2013
'பாமகவை தடைசெய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை'
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 14 மே, 2013 - 08:35 ஜிஎம்டி
இந்தியாவில் எந்தவொரு அரசியல் கட்சி மீதும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே உண்டு, அரசுகளுக்கு அல்ல என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சட்டமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, பொது அமைதியைக் காக்கவேண்டி பாமகவைத் தடை செய்யவும் தனது அரசு தயங்காது என எச்சரித்திருந்தார்,
தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ராமதாஸ், பேருந்துகள் மீதான கல்வீச்சு, பெட்ரோல் குண்டு வீச்சு, பொதுச் சொத்துக்களையும் தனியார் சொத்துக்களையும் சேதப்படுத்தல், மரங்களை வெட்டிச் சாய்த்தல் உள்ளிட்ட வன்முறைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தான் நடத்தினர் என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார்.ராமதாஸின் கைதிற்குப் பின்னர் பாமக பல்வேறு வன்முறைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
பாமகவினர் பலர் கைதான நிலையில், காவல்துறையின் அச்சுறுத்தலால் ஊரைவிட்டே தலைமறைவாகியிருக்கும் தமது கட்சியினர் எப்படி வன்முறைகளில் ஈடுபடமுடியும் என்றும் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அரசின் அடக்கு முறைகளை எதிர்த்தும் வன்முறைகளுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் நீதிமன்றத்தில் பா.ம.க. வழக்குத் தொடர உள்ளதாக அவர் கூறினார்.
வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசும் காவல்துறையும் செய்த தவறுகள் அம்பலமாகிவிடும் என்ற அச்சத்தில், பா.ம.க.வினர்தான் வன்முறைகளை நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டை சட்டப்பேரவையில் பதிவு செய்து, அதன் மூலம் நீதித்துறையை மறைமுகமாக அச்சுறுத்த தமிழக முதல்வர் முயன்றிருக்கிறார் என்றும் ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.
முதல்வர் ஜெயலலிதா தமது அதிகார எல்லையை மறந்து பா.ம.கவை தடை செய்யப்போவதாக கூறியிருக்கிறார் என்றும் அவர் கூறினார்.
'ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் எதைவேண்டுமானாலும் கூறலாம் என்ற எண்ணத்தில், பாட்டாளி மக்கள் கட்சி மீது அவதூறான குற்றச்சாட்டுகளை முதல்வர் அள்ளி வீசியிருக்கிறார். தமது விருப்பத்தை வெளிப்படுத்தும் வகையில், தமக்கு இல்லாத அதிகாரத்தைப் பயன்படுத்தி பா.ம.க.வை தடை செய்வோம் என்ற அளவுக்கு ஆத்திரத்தை உமிழ்ந்திருக்கிறார். பா.ம.க. மீது முதல்வர் ஜெயலலிதா எந்த அளவுக்கு வஞ்சத்தையும், பழிவாங்கும் உணர்ச்சியையும் கொண்டிருக்கிறார் என்பதற்கு அதுவே உதாரணம்' என்று பாமக நிறுவனர் தெரிவித்தார்.
'முதலவர் ஜெயலலிதா கட்டவிழ்த்துவிடும் அடக்குமுறைகளை தமிழக மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதற்காக அவர்கள் சரியான நேரத்தில் சரியான பாடத்தை புகட்டுவார்கள்' என்றும் ராமதாஸ் தனது அறிக்கையில் மேலும் கூறியிருக்கிறார்
0 comments:
Post a Comment