>> Friday, May 17, 2013
அதிக விளைச்சலைத் தரும் புதிய வகை கோதுமை
கோதுமை உற்பத்தி திறனை 30 வீதத்தினால் அதிகரிக்கக் கூடிய ஒரு புதிய வகை கோதுமை தாவரத்தை தாம் உருவாக்கியிருப்பதாக பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
புராதன வகை கோதுமை தாவர வகை ஒன்றை நவீன ரக கோதுமையுடன் இணைத்ததன் மூலம் இந்த புதிய வகையான வினைத்திறன் மிக்க கோதுமை தாவர வகை உருவாக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நடத்தப்பட்ட சோதனைகள் இந்தப் புதிய வகை தாவரம் தற்போதைய கோதுமை வகைகளை விட பலமானதாகவும், பெரியதாகவும், இருப்பதாக காட்டியுள்ளன என்று அதனை உருவாக்கிய கேம்பிரிஜ்ஜை தளமாகக் கொண்ட விவசாய தாவரவியலுக்காக தேசிய நிறுவனம் கூறியுள்ளது.
விவசாயிகள் இதனைப் பயிரிடுவதற்கு அனுமதிப்பதற்கு முன்னதாக அது குறித்து 5 வருடங்கள் சோதனைகள் நடத்தப்பட வேண்டியுள்ளது. அத்துடன் அது குறித்து ஒழுங்குபடுத்தும் அமைப்பின் அனுமதியும் பெறப்பட்டாக வேண்டும்.
ஆனால், இந்த அனுமதிக்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று சில விவசாயிகள் வலியுறுத்துகிறார்கள்.
அடுத்த சில தசாப்தங்களுக்கான உலக உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த விரைவுபடுத்தல் மிகவும் அவசியம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
உலக உணவுத் தேவைக்கு அதிக விளைச்சல் தேவை
உலகில் அத்தியாவசிய உணவுத்தேவையில் ஐந்தில் ஒரு பங்கை கோதுமைதான் நிறைவேற்றுகிறது.
20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு ஸ்திரமான வளர்ச்சி காணப்பட்டாலும், கடந்த 15 வருடங்களில் பிரிட்டனில் கோதுமை அறுவடையில் பெரும் வளர்ச்சி எதுவும் காணப்படவில்லை.
தானிய துரித உணவுகளை தயாரிக்கும் முன்னணி நிறுவனமான வீட்டாபிக்ஸ் நிறுவனம். கடந்த வருடத்தில் பிரிட்டனில் போதுமான கோதுமை கிடைக்காத காரணத்தால் தாம் தமது தயாரிப்புக்களை குறைக்க நேர்ந்ததாகக் கூறியுள்ளது.
ஆனால், இந்தக் கோதுமை உற்பத்தியில் தம்மால் ஒரு வினைத்திறன் மிக்க கோதுமை தாவர வகையை அறிமுகப்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
ஆடுகளுக்கான புற்கள் மற்றும் ஏனைய தாவரங்களில் இருந்து பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கோதுமை உருவானது.
தாவரங்களின் கலப்பு இனங்களை உருவாக்குவது மற்றும் கருமாற்ற தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் பழமை வாய்ந்த கோதுமை இனங்களில் இருந்து விஞ்ஞானிகள் தற்போதைய நவீன ரக பிரிட்டிஷ் கோதுமை வகைகளை உருவாக்கினார்கள்.
ஆனால், இந்த புதிய ரக கோதுமை தாவரங்களை உருவாக்குவதில் மரபணு மாற்ற நடைமுறை எதுவும் சம்பந்தப்படவிலை என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
0 comments:
Post a Comment