>> Tuesday, May 14, 2013
பாமகவை தடைசெய்யவும் தயங்கப் போவதில்லை: ஜெ. எச்சரிக்கை
தமிழகத்தில் பொது அமைதியினைக் காப்பாற்ற வேண்டி பாட்டாளி மக்கள் கட்சியைத் தடை செய்யவும் தனது அரசு தயங்காது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீதும் அவர்களைத் தூண்டுவோர் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ள ஜெயலலிதா, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது குண்டர் சட்டத்தின் கீழும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
பொதுச் சொத்துக்களுக்கும் தனியார் சொத்துக்களுக்கும் ஏற்பட்டுள்ள இழப்பு கணக்கிடப்பட்டு, 1992 ஆம் ஆண்டு தமிழ்நாடு பொதுச் சொத்து (சேதம் மற்றும் இழப்பைத் தடுத்தல்) சட்டத்தின்படி பாட்டாளி மக்கள் கட்சியினரிடம் இருந்து அந்த இழப்புக்கான நட்டஈடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டமன்றத்தில் அறிவித்தார்.
தன் மீதும் தமிழக அரசின் மீதும் காவல் துறை மீதும் அவதூறுகளைப் பரப்பிவரும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் மீது அரசின் சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றும் ஜெயலலிதா தெரிவித்தார்.
டாக்டர் இராமதாஸ் கைதானதை ஒட்டி தமிழகத்தின் சில பகுதிகளில் நடந்த வன்முறைகள் குறித்து தமிழக சட்டமன்றத்தில் இன்று திங்கள் கொண்டுவரப்பட்ட சிறப்பு கவனயீர்ப்புத் தீர்மானத்தின்போதே பாமகவை ஜெயலலிதா கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
'படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில்'
'பாமக நடத்திய வன்முறைச் சம்பவங்கள் காரணமாக மூவர் இறந்திருக்கின்றனர், 111 பேர் படு காயம் அடைந்திருக்கின்றனர், இரண்டு சரக்கு லாரிகள் மற்றும் 14 பேருந்துகள் உட்பட 16 வாகனங்கள் தீக்கிரையாயின, மேலும் 853 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. அண்மைய சேதங்களால் பலநூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது மட்டுமன்றி இரண்டு பாலங்கள் வெடி வைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன' எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், 'நெடுஞ்சாலைகளில் நிழல் தந்து வந்த 120 மரங்கள் சாலைகளில் வெட்டிச் சாய்க்கப்பட்டும், 45 மரங்கள் எரிக்கப்பட்டும், மொத்தம் 165 மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். பசுமைத் தாயகம் என்ற பெயரில் ஒரு புறம் மரங்களை நடுவதாகக் கூறிக் கொண்டு, மறு புறம் மரங்களை வெட்டி சாய்ப்பது, தீ வைத்து எரிப்பது என்பது “படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில்'' என்பது போல்' என்றார் ஜெயலலிதா.
தனது அரசு மேற்கொண்ட சீரிய நடவடிக்கைகளினால் தமிழகத்தில் தொழிற்சாலைகளைத் துவங்க பன்னாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டு வரும் நிலையில், மாநிலத்தின் மீது அவர்கள் வைத்துள்ள நல்ல அபிப்பிராயத்திற்கு களங்கம் ஏற்படுத்தி, தொழில் முதலீட்டிற்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சியினரின் வன்முறை அமைந்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
சிறையில் இருந்து விடுதலையான பின்னரும் டாக்டர் இராமதாஸும் அவரது மகன் அன்புமணி இராமதாஸும் தொடர்ந்து வன்முறையைத் தூண்டிவருவதாகவும், நேற்று கூட சில வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் கூறிய முதல்வர், ’அரசியல் கட்சிகளுக்கு உள்ள பொதுவான இலக்கணங்களுக்கு மாறாக, பாட்டாளி மக்கள் கட்சி கடந்த சில தினங்களாக வன்முறையில் ஈடுபட்டு வருகிறது. பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும், பொதுச் சொத்துக்களுக்கும் ஊறு விளைவித்தல், சட்டம் ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்தல், அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் போன்ற சட்ட விரோதச் செயல்களில் பட்டாளி மக்கள் கட்சியினர் ஈடுபடுவதை தனது அரசு ஒரு போதும் சகித்துக் கொள்ளாது' எனவும் எச்சரித்தார்.
0 comments:
Post a Comment