>> Thursday, May 16, 2013
இலங்கை மாநாட்டில் கலந்துகொள்வதான முடிவு சர்ச்சைக்குரியது' - பிரிட்டிஷ் துணைப் பிரதமர்
இலங்கையில் நடக்கவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்வது என்ற பிரிட்டனின் முடிவு சர்ச்சைக்குரியது என்று பிரிட்டிஷ் துணைப் பிரதமரும் லிபரல் டெமொகிரடிக் கட்சியின் தலைவருமான நிக் கிளெக் கூறியுள்ளார்.
இலங்கை மனித உரிமைகளை மீறியிருக்கும் நிலையில் பிரிட்டனின் இப்படியான முடிவு சர்ச்சைக்குரியது என்று அவர் கூறியுள்ளார்.
மனித உரிமை மீறல்களை உரிய வகையில் கையாளாவிட்டால், அதற்கான பிரதிபலன்களை தலைநகர் கொழும்பில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாடு நடக்கும் போது இலங்கை எதிர்கொண்டாக வேண்டும் என்று நிக் கிளெக் கூறியுள்ளார்.
பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமெரனும் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக்கும் நவம்பரில் நடக்கும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். கமெரன் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார் என்று பிரதமர் அலுவலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கான கேள்வி நேரத்தின் போது கமெரனுக்கு பதிலாக கேள்விகளுக்கு பதிலளித்த போதே துணைப் பிரதமர் நிக் கிளெக் இவ்வாறு கூறியுள்ளார்.
கேள்வி நேரத்தின்போது லிபரல் டெமொக்கிரட் கட்சியின் துணைத்தலைவரான சைமன் ஹியூஸ் அவர்கள், ''இலங்கையின் மனித உரிமை நிலவரங்களின்படி, அங்கு நடக்கும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வது என்ற பிரிட்டிஷ் பிரதமரின் முடிவை நான் ஆதரிக்க முடியாது'' என்று கூறினார்.
''இலங்கையின் மோசமான ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளுக்கு நாம் எப்படி பதிலளிக்க வேண்டும் என்று நீங்கள் எனக்கு கூறவேண்டும், அத்துடன் எதிர்காலத்தில் பொதுநலவாய அமைப்பு தாம் மனித உரிமைகளில் நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்று வெறுமனே கூறாது, மனித உரிமைகளுக்காக என்ன செய்தோம் என்பதைக் கூறுவதற்கு நாம் என்ன செய்யலாம் என்பது குறித்தும் நீங்கள் எமக்கு கூற வேண்டும்'' என்று பிரதமருக்கான கேள்வி நேரத்தில் அவர் மேலும் கேட்டார்.
அதற்கு பதிலளித்த அதே கட்சியின் தலைவரும், துணைப் பிரதமருமான நிக் கிளெக் அவர்கள், '' அதனை நான் அறிவேன், அத்துடன் அண்மைய போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ள நிலையில் குறிப்பாக, இலங்கை மாநாட்டில் கலந்து கொள்வது என்ற பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர்களின் முடிவு சர்சைக்குரியது '' என்றார்.
அதேவேளை, நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் அலுவலகப் பேச்சாளர் ஒருவர், பிரதமர் நிச்சயமாக இலங்கை மாநாட்டில் கலந்துகொள்வார் என்றும், இலங்கை மனித உரிமை விடயங்களை உரிய வகையில் கையாள வேண்டும் என்று விடயத்தை வலியுறுத்துவதும் அவர்கள் அந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்றும் கூறினார்.
0 comments:
Post a Comment