>> Wednesday, May 29, 2013
காவிரி: இழப்பீடு கேட்டு தமிழக அரசு வழக்கு
காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் உத்திரவின்படி தமிழகத்திற்குரிய நீர் வழங்கப்படாததால் ஏற்பட்டிருக்கும் இழப்பை ஈடு செய்யும் வகையில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு ரூ.2480 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டுமெனக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஜனவரியிலேயே தமிழகத்திற்குரிய நீர் பங்கினை கர்நாடகம் திறந்துவிட மறுப்பதால், மாநில விவசாயிகள் பெரும் இழப்புக்குள்ளாவதாகப் பலமுறை எடுத்துக்கூறியும் கர்நாடகா செவிமடுப்பதில்லை, தீர்ப்பாயம் மற்றும் கண்காணிப்புக் குழுவின் உத்திரவுகளையும் மதிப்பதில்ல, எனவே இழப்பீடு கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக அறிவித்திருந்தார்.
அதன்படி உச்சநீதிமன்றத்தின் கோடைகால விடுமுறைக்கு முதல்நாளான மே ஒன்பதாம் தேதியன்று தமிழக அரசு சார்பில் இழப்பீடு கோரும் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
கூடுதல் நீர்
அம்மனுவில் 2012-13இல் கர்நாடகா தண்ணீர் திறந்து விடாததால், தமிழக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தி மற்றும் விவசாய சார்பு பொருட்கள் உற்பத்தி ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே அதற்கு இழப்பீடாக தமிழகத்திற்கு ரூ.1045 கோடியே 70 லட்சம் கர்நாடகா தர வேண்டும், மேலும் வேண்டுமென்றே காவிரி நதிநீர் தீர்ப்பாய உத்திரவுகளை அமல்படுத்தாதற்காக தண்டனைக் கட்டணமாக ரூ.1434 கோடி தரவேண்டுமெனக்கோரப்பட்டுள்ளது.
கடந்த சம்பா பருவத்தில் மூன்று இலட்சம் ஏக்கரில் நெல் விளைவிக்க முடியாமல் போய்விட்டதாகவும் தமிழக அரசு கூறுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு தீர்ப்பாய உத்திரவு அமலாகாததால் தமிழகத்திற்கு மறுக்கப்பட்ட 53.18 டிஎம்சி காவிரி நீர் இப்போது திறந்துவிடப்படவேண்டுமெனவும் கர்நாடகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்திரவிடவேண்டுமெனவும் தமிழக அரசின் மனு கோருகிறது.
இம்மனு ஜூலை முதல்வாரத்தில் விசாரணைக்கெடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது. இவ்வாறு இரு மாநிலங்களுக்கிடையேயான நதி நீர் பிரச்சினை தொடர்பாக இழப்பீடு கோருவதற்கு முன்னுதாரணம் இருப்பதாகத் தெரியவில்லை என்கின்றனர் சில சட்ட வல்லுநர்கள்.
0 comments:
Post a Comment