>> Wednesday, September 15, 2010



உலக நாடுகள் எதிர்நோக்கும் ஒய்வூதிய சவால்


தமது அன்பை பரிமாறிக்கொள்ளும் தம்பதியினர்
பல நாடுகளில் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஓய்வூதியம் தொடர்பான பெரிய பிரச்சினைகளைத் தோற்றுவித்து வருகிறது.
அதிகரித்து வரும் முதியோர் எண்ணிக்கைக்கு ஏற்ப எவ்வாறான மாற்றங்களைச் செய்வதென்பது உலக நாடுகள் பல தற்போது எதிர்கொண்டுவரும் மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது.

முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பு என்பது ஓய்வூதியத்துக்கான முறையான ஏற்பாடுகளை வைத்திருக்கும் பல நாடுகளில் நிதிப் பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளது.

ஓய்வூதியத்துக்கான ஏற்பாடுகள் அறவே இல்லை அல்லது மிகக் குறைவாகவே இருக்கின்றன என்றாலும்கூட, வளருமுக நாடுகளிலும் இது பிரச்சினைக்குரிய ஒரு விவகாரம்தான்.

ஆயுட்காலம் அதிகரிக்கிறது

உலக அளவில் மனிதர்களின் சராசரி ஆயுட்காலத்தை சற்றுத் திரும்பிப் பார்த்தோமானால், 1960ல் பிறந்த ஒருவர், 52 வயது வரை வாழுவார் என்று எதிர்பார்க்கக்கூடிய நிலை இருந்தது. அதுவே இந்த வருடம் பிறக்கின்ற ஒரு குழந்தை, 69 வயது வரை வாழும் என்று எதிர்பார்க்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

மருத்துவ முன்னேற்றங்களால் மனிதர்களின் ஆயுட்காலம் கூடிவருவது ஒரு புறம் நடக்கும் நிலையில், மக்கள் பிள்ளை பெற்றுக்கொள்வது குறறைந்து வருகிறது. இரண்டையும் சேர்ந்துப் பார்க்கையில், ஒரு தேசம் முதுமை எய்திவருகிறது என்று சொல்லலாம்.

செல்வந்த நாடுகளில் இந்நிலையால் வரிப்பணம் மூலம் வயோதிகர்களுக்கு வழங்கப்படும் அரசு ஓய்வுவூதியத்தில் பெரும் பிரச்சினை உருவாக்கியுள்ளது.

அண்மைய உலக நிதி நெருக்கடியால் அரசாங்கங்களின் வரி வருமானம் குறைந்துபோனதும் இந்தப் பிரச்சினையை பெரிது படுத்தியுள்ளது.

தனியார் ஓய்வூதியம்

அரசாங்க ஓய்வூதியம் என்றில்லாமல் வேலை பார்த்த காலத்தில் சேமித்த பணத்தைக் கொண்டு வழங்கப்படும் தனியார் ஓய்வூதியங்களிலும் வயோதிகர் எண்ணிக்கை அதிகரிப்பு பாதகங்களை ஏற்படுத்திவருகிறது.

அண்மையில் வேலையில் இருந்து ஓய்வுபெற்ற பலரைப் பொருத்தவரையில், ஓய்வூதியத்துக்காக அவர்கள் சேமித்த பணத்தைக் கொண்டு செய்திருந்த முதலீடுகள் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக மதிப்பு குறைந்திருந்தன.

வளருமுக நாடுகள்


வயதான இந்தியர்கள்

இந்தப் பிரச்சினை செல்வந்த நாடுகளுக்குத்தான் என்றில்லை. வளருமுக நாடுகளிலும் ஜனத்தொகையில் வயோதிகர்களின் எண்ணிக்கை கூடிவருகிறது.

உதாரணத்துக்கு சீனாவை எடுத்துக்கொண்டால், ஒரு குடும்பத்துக்கு ஒரு பிள்ளை என்ற அரசு கொள்கை காரணமாக, அங்கே பிறக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது.

அதேநேரம் அங்கே பொருளாதாரம் வேகமாக அதிகரித்துவரும் நிலையில், மக்களின் செல்வச் செழிப்பு கூடுகிறது, மக்களின்சராசரி ஆயுட்காலமும் அதிகரித்துவிட்டது.

வளருமுக நாடுகளைப் பொறுத்தவரை, வயோதிகர்களைப் பாதுகாப்பதில் பொதுவாக அவரவர் குடும்பங்கள்தான் முக்கியப் பங்காற்றுகின்றன. ஆனால் பிள்ளைகளின் எண்ணிக்கை குறையக் குறைய பெரியவர்களைப் பாதுகாப்பதில் அவர்களுக்குள்ள சிரமங்கள் அதிகரிக்கின்றன.

தவிர அங்கே வேலை பார்க்கும் வயதில் உள்ளவர்கள் வேலை வாய்ப்புக்காக நகரங்களை நோக்கிச் சென்றுவரும் நிலையில், கிராமங்களில் தங்கிவிட்ட முதியவர்களை அவர்கள் பராமரிப்பதற்கான சந்தர்ப்பங்களும் குறைந்துவருகின்றன.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter