>> Tuesday, September 14, 2010
"அமெரிக்க விமர்சனத்தால் அதிருப்தி"
இலங்கையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட 18வது அரசியல் சட்டத் திருத்தம் குறித்து அமெரிக்க அரசின் ராஜாங்கத்துறை தெரிவித்திருந்த விமர்சனங்கள் பற்றி இலங்கை அரசு தனது கவலையை வெளியிட்டிருக்கிறது.
இந்த அரசியல் சட்டத் திருத்தம், இலங்கையின் உச்ச நீதிமன்றத்தின் ஏகமனதான முடிவை ஒட்டியும், நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையுடனும் நிறைவேற்றப்பட்டதாக, இலங்கை அரசின் வெளிநாட்டமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருக்கிறது.
மேலும், இந்த அரசியல் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது என்பது, இலங்கையின் முழுமையான உள்நாட்டு விவகாரம் என்றும் அது குறிப்பிட்டிருக்கிறது.
அமெரிக்க ராஜாங்கத்துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இலங்கை அரசால் நிறைவேற்றப்பட்ட இந்த அரசியல் சட்டத்திருத்தம், ஜனநாயகத்தை குலைப்பதாக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது.
இலங்கையில் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கூட்டுவதாகவும், இரண்டு தடவைக்கு மேல் ஒருவர் ஜனாதிபதியாகப் போட்டியிடுவதை அனுமதிப்பதாகவும் இந்த அரசியல் சாசனத் திருத்தம் அமைந்துள்ளது.
0 comments:
Post a Comment