>> Tuesday, September 7, 2010


அரசியல் சட்ட திருத்தம்: த.தே.கூ. எதிர்ப்பு


நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்
நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை வலுப்படுத்திக்கொள்ளும் நோக்கில் இலங்கை அரசு புதன் கிழமை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள 18வது அரசியல் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து வாக்களிப்பது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

சுமந்திரன் செவ்வி

திங்கட்கிழமையன்று இக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய கூட்டத்தில் இந்த முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்த சட்டமூலம் நாட்டுக்குப் பெருந்தீங்கு செய்வதுடன், சிறுபான்மை இன மக்களுக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்று தாங்கள் கருதுவதாக அவர் கூறினார்.

இலங்கையில்நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவிக்கு தமிழ்க் கட்சிகள் வரலாற்று ரீதியாகப் பார்க்கையில் பெரிய எதிர்ப்பைக் காட்டியதில்லை, உண்மையில் சர்வாதிகாரம் கொண்ட ஜனாதிபதியாலேயே இந்த இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் என்று தமிழ்க் கட்சிகளிடையே ஒரு கருத்து நிலவியது என்பதை சுமந்திரன் ஒப்புக்கொண்டார்.

"ஆனால் தற்போது எந்த சிறுபான்மைக்கட்சிகளும் அந்த கருத்தைக் கொண்டிருக்கவில்லை. ஏனென்றால், நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதை முறைமை, கடந்த 30 ஆண்டுகளில் சிறுபான்மைப் பிரச்சினைகளை தீர்க்கவில்லை என்பதே யதார்த்தம்" என்று சுமந்திரன் கூறியுள்ளார்.

மேலும், பலருக்குத் தெரியாத பல ஷரத்துக்கள் இந்த சட்டமூலத்த்தில் இடம் பெற்றிருக்கின்றன என்று கூறிய சுமந்திரன், முன்பு கொண்டுவரப்பட்ட 13வது சட்டத்திருத்தம், 17வது சட்டத்திருத்தம் ஆகியவற்றை பாதிக்கும் பல பிரிவுகள் இவற்றில் இருப்பதாகவும்ம, எனவே இந்த சட்டமூலத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களில் பலர் வெளிநாடுகளில் இருப்பதால், அவசரமாக நடத்தப்படும் இந்த வாக்கெடுப்பில் அவர்கள் அனைவரும் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை இருக்கிறது என்று சுமந்திரன் கூறினார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter