>> Wednesday, September 8, 2010


18 ஆவது சட்ட திருத்தத்துக்கு நீதிமன்றம் பச்சைக் கொடி


இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே
இலங்கை அரசியலமைப்பில் செய்யப்படவுள்ள திருத்தத்துக்கு பொது வாக்கெடுப்பு தேவையில்லை என்று இலங்கை உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இதன் மூலம், அந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கு இலங்கை உச்ச நீதிமன்றம் வழி செய்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில்சபாநாயகர் சாமல் ராஜபக்ஷ அவர்கள் இதனை அறிவித்தார்.

இலங்கையில் ஒருவர் எத்தனை முறை ஜனாதிபதியாக வரலாம் என்பதற்கு தற்போது இருக்கின்ற கட்டுப்பாட்டை இந்த அரசியலமைப்பு திருத்தம் நீக்குவதுடன், ஜனாதிபதிகான அதிகாரத்தையும் அது பெருமளவு அதிகரிக்க உதவுகிறது.

எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் தலைநகர் கொழும்பில் இதற்கு எதிராக போராட்டங்களை நடத்தினாலும், அந்த அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கான நடவடிக்கைகள் பெரும்பாலும் திடமாக மேற்கொள்ளப்பட்டுவிட்டதாகவே தெரிகின்றது.

அரசியலமைப்பின் 18 வது திருத்தம் என்று கூறப்படுகின்ற இந்த சர்ச்சைக்குரிய திருத்தத்துக்கு எதிராக நடக்கும் எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் இணைந்துகொண்டிருக்கிறார்கள்.

இது ஜனநாயகத்துக்கு விழுந்த ஒரு பெரிய அடி என்று அரசை விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள். ஆனால், இது வாக்காளர்களுக்கு உள்ள தெரிவுகளை அதிகரிக்கிறது என்று ஜனாதிபதி கூறுகிறார்.

தற்போது இலங்கையில் ஒருவர் இரு தடவைகள் மாத்திரமே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட முடியும். அந்தக்கட்டுப்பாட்டை இந்த புதிய அரசியலமைப்பு திருத்தம் நீக்குகிறது. இதனால், மூன்றாவது தடவையாகவும், 2016 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும். அத்துடன் இது அவரது அதிகாரங்களை அதிகரித்து, நாட்டின் அதியுயர் நீதிபதிகள், தேர்தல், மனித உரிமைகள் மற்றும் ஏனைய விவகாரங்களுக்கான ஆணையாளர்கள் ஆகியோரை எந்தவிதமான சட்ட ரீதியான தடைகளும் இன்றி அவர் நியமிக்கவும் வழி செய்கிறது.

இந்த அரசியலமைப்பு திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடத்தும் சட்டத்தரணிகளின் குழுவுக்கு தலைமை தாங்கும் கிறிஸ்மல் வர்ணசூரிய,
இந்த விடயம் தொடர்பில் மக்கள் எந்த வகையிலும் ஆலோசிக்கப்படவில்லை என்று கூறுகிறார்.

ஆனால், இந்த சட்டத்திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக பெருமளவு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கம் கவந்திழுத்திருக்கிறது.

அவர்களில் ஒருவர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த ரவூப் ஹக்கீம். இந்த சட்டமூலம் அவசர அவசரமாக கொண்டுவரப்படுவது குறித்து தான் சங்கடமடைவதாக கூறுகின்ற அவர், ஆனால், தனது சமூகத்துக்கு அபிவிருத்தி பலாபலன்கள் கிடைக்கும் என்பதால், தான் அதற்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாகக் கூறுகிறார்.

இந்த அரசியலமைப்பு திருத்தச்சட்ட வாக்களிப்பை தாம் முற்றாக புறக்கணிக்கப்போவதாக முக்கிய எதிர்க்கட்சி கூறுகிறது. ஆகவே புதனன்று இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை அரசாங்கம் பெறப்போவது உறுதியாகிறது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter