>> Monday, September 13, 2010


18 வது திருத்தம் குறித்து அமெரிக்கா


அமெரிக்க அரசுத்துறை முத்திரை
இலங்கை அரசியலமைப்பில் அண்மையில் செய்யப்பட்ட 18 வது திருத்தம் குறித்து அமெரிக்கா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க பொது விவகார பணியக துணைச் செயலர் பிலிப் ஜே கிரௌலி அவர்களால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே இந்தக் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் அதிகரிக்கும் என்று பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்த, இலங்கை அரசியலமைப்பின் 18 வது திருத்தச் சட்டமூலத்துக்கு இலங்கை நாடாளுமன்றம் கடந்த வாரத்தில் தனது அங்கீகாரத்தை வழங்கியிருந்தது.

அந்தத் திருத்தத்தை சர்வஜன வாக்கெடுப்புக்கு விட வேண்டிய அவசியம் கிடையாது என்று இலங்கை உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளது.

இந்த நிலையிலேயே அமெரிக்கா இந்த அரசியலமைப்பு திருத்தம் குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளது.

இலங்கை 18வது அரசியலமைப்புத் திருத்தத்தின் உள்ளடங்கங்களையும், அது குறித்த நடவடிக்கைகளையும் மிகவும் உன்னிப்பாக அமெரிக்கா கவனித்து வருவதாக கூறியுள்ள அமெரிக்க துணைச் செயலரின் அறிக்கை, அந்த திருத்தம் ஜனாதிபதியின் ஆட்சிக்காலங்களுக்கான மட்டுப்பாட்டை ஒழிப்பதாகவும், தேர்தல், பொலிஸ், மற்றும் மனித உரிமைகள், நீதித்துறை ஆகியவை உட்பட சுயாதீன நிறுவனங்கள் மீதான ஜனாதிபதியின் அதிகாரத்தையும் அது விரிவுபடுத்துவதாகவும் கூறியுள்ளது.

இந்த அரசியலமைப்பு திருத்தம், ''முறைமைகள் மீதான பரிசோதனைகள் மற்றும் சமநிலைகள்'' ஆகியவற்றை பலவீனப்படுத்துவதாகவும், அரசியலமைப்பு ஜனநாயகத்தின் கோட்பாடுகளை குறைத்து மதிப்பிடுவதாகவும் அமெரிக்கா கவலை கொள்கிறது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

நல்ல ஆட்சி, ஜனநாயகம் மற்றும் சுயாதீன அரச நிறுவனங்கள் ஆகியவற்றை இலங்கை மேம்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா கோரியுள்ளது.

சுயாதீன நிறுவனங்களுக்கு தகுதிவாய்ந்த நியமனங்களைச் செய்வதன் மூலமும், வெளிப்படைத் தன்மையை அதிகரிப்பதன் மூலமும், அதிகாரப் பகிர்வையும் பேச்சுவார்த்தைகளையும் விரிவுபடுத்துவதன் மூலமும், மற்றும் தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதன் மூலமும் ஜனநாயகத்தை பலப்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அமெரிக்கா கேட்டுள்ளது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter