>> Thursday, September 16, 2010




காசநோய்க்கு துரித பரிசோதனை
காச நோயின் பாதிப்பு
ஒருவரது உடலில் காசநோயை உண்டாக்கக்கூடிய பாக்டீரியா இருப்பதை ஒரே மணி நேரத்தில் கண்டறியக்கூடிய புதிய விசேட பரிசோதனை ஒன்றை தாம் உருவாக்கியுள்ளதாக ஐக்கிய ராஜ்ஜியத்தின் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
காசநோயை உண்டாக்கக்கூடிய அனைத்து வகை பாக்டீரியாவையும் இந்தப் பரிசோதனை கண்டுபிடித்துவிடும் என்று இதனை உருவாக்கியுள்ள ஹெல்த் புரொட்டெக்ஷன் ஏஜென்ஸி என்ற அமைப்பும் அதன் ஆராய்ச்சியாளர்ககளும் தெரிவிக்கின்றனர்.

காசநோயை உண்டாக்ககூடிய பாக்டீரியாவானது மனிதர்களிலே குடிகொண்டிருக்கத்தான் செய்கிறது என்றாலும் இந்த பாக்டீரியாவை உடலில் பெற்றுள்ளவர்களிலே ஐந்து முதல் பத்து சதவீதம் வரையிலானோருக்குத்தான் இது நோயாக உருவெடுக்கிறது. ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் உலகில் பத்து லட்சத்துக்கும் அதிகமானோரை இந்த நோய் பலிகொண்டு வருகிறது.


இதுகாலம் வரையில் ஒருவர் உடலில் அந்த பாக்டீரியா இருப்பதை கண்டறிய எட்டு வார காலம் வரையில் அவகாசம் தேவைப்பட்டது. அந்த காலப் பகுதியில் நோய் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு, ஏன் மற்ற கண்டங்களுக்கேகூட பரவிவிடுகின்ற ஆபத்து உள்ளது. ஆனால் தற்போது பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய பரிசோதனையானது பாக்டீரியாவை மிக வேகமாகக் கண்டறிந்துவிடுகின்றது. அனைத்து வகை காசநோய் பாக்டீரியாவுக்கும் பொதுவான ஒரு மரபணு அடையாளத்தை இனம்காணுவதன் மூலம் இந்த பரிசோதனை செயல்படுகிறது.

பரிசோதனைக்கூடத்துக்கு சென்று கொஞ்ச நேரம் காத்திருந்து முடிவை தெரிந்துகொள்ளலாம் என்கிற அளவுக்கு இப்பரிசோதனையில் துரிதமாக முடிவு தெரிந்துவிடும் என்று ஹெல்த் புரொட்டெக்ஷன் ஏஜென்ஸியின் டாக்டர் கேத் அர்னால்ட் கூறினார்.


2008ஆம் ஆண்டில் மட்டும் உலகில் 13 லட்சம் பேர் காசநோயால் உயிரிழந்துள்ளதாக ஐ.நா.மன்றத்தின் உலக சுகாதார கழகம் மதிப்பிட்டுள்ளது.

மேற்குலகத்திலும் காசநோய் வருவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாகத் தெரியும் நிலையில், இந்த புதிய பரிசோதனை முறைகள் வெளிவந்ததுள்ளன.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter