>> Tuesday, September 28, 2010
தொலை இயக்கி மருத்துவக் கருவிகள்
மருத்துவ ரீதியில் பயன்படுத்தவல்ல தொலை-இயக்கிக் கருவிகளில் தற்போது வந்துள்ள புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்களை அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடந்த கண்காட்சி ஒன்றில், மருத்துவ உபகரண உற்பத்தித் தொழில்துறையினர் காட்சிப்படுத்தியிருந்தனர்.
இந்த வகையான நடமாடும் கருவிகளால் நோயாளிகளின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்க முடியும். அதாவது நோயாளி மருத்துவரிடம் செல்லும்போதுதான் என்றில்லாமல், அவர் எங்கிருந்தாலும் அவருடய உடல்நிலையை கண்காணிக்க முடியும்.
இந்தக் கருவிகளின் துணை கொண்டு மிகுந்த பலன் தரும் வகையில் நோயாளிகளுக்கு பராமரிப்பு வழங்க முடியும் என்றும், நோயாளிகளை மருத்துவமனையில் சேர்ப்பதற்கான சந்தர்ப்பங்கள் குறையும் என்றும் ''பாடி கம்ப்யூட்டிங்'' என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த மாநாடில் கலந்துகொண்டிருந்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தென் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் செண்டர் ஃபார் பாடி கம்ப்யூட்டிங் என்ற புதிய மையத்தில் இந்த மாநாடு நடந்தது. நோயாளிக்கு வழங்கக்கூடிய பராமரிப்பின் தரத்தை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஏராளமான புதிய கருவிகளில் இந்த மாநாடு கவனம் செலுத்தியது. கையில் எடுத்துச் செல்லத்தக்க சிறிய சென்சார் கருவிகள், நவீன செல்லிட தொலைபேசிகள், உடலின் உள்ளே பொருத்தக்கூடிய சிறு கருவிகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு மருத்துவர் தன்னிடம் வருகின்ற நோயாளியின் உடல்நிலையை நாள் முழுக்க கண்காணிக்கின்ற தொழில்நுட்பத்தைப் பெற முடியும் என்று இந்த மையத்தின் செயல் இயக்குநரான இருதய நல மருத்துவ நிபுணர் டாக்டர் லெஸ்லீ சாக்ஸன் விளக்கினார்.
உடல்நிலையை கண்காணிக்கும் இந்தக் கருவிகள் தற்போது நவீன செல்லிட தொலைபேசிகளிலேயே அமைந்திருப்பதுபோல் வந்துவிட்டன. நோயாளியின் இருதயத் துடிப்பை அளந்து செல்லிட தொலைபேசி வலையமைப்பு மூலம் அந்தத் தகவலை இவை மருத்துவருக்கு அனுப்புகின்றன.
நோயாளி ஒருவர் அல்லது முதியவர் ஒருவரின் வீட்டை கம்பியில்லா தகவல் பரிமாறவல்ல இப்படியான உபகரணங்கள் மூலம் காண்காணிக்கின்ற தொழில்நுட்பமும் இந்த மாநாட்டில் காண்பிக்கப்பட்டது. சென்சார் கருவிகள் விசேட கணினி மென்பொருட்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி கண்காணிக்கப்படும் வீட்டில், ஒரு குளிர்சாதனப் பெட்டியை அவர் திறந்தாலோ அல்லது அவர் வழமையாக உட்காரக்கூடிய நாற்காலியில் அவர் உட்கார்ந்தாலோ, எழுந்தாலோ, படுக்கையில் படுத்தாலோ அது பற்றி தொலைவில் இருந்தபடியே தகவல் அறிய முடியும்.
இருதயத் துடிப்பு போன்ற விஷயங்களை அளக்கவல்ல உடலில் பொருத்தக்கூடிய மலிவு விலையிலான சிறு கருவி ஒன்றை இந்தப் பல்கலைக்கழகம் உருவாக்கி வருகிறதாம். அந்தக் கருவியை உடலில் பச்சை குத்துவதுபோல செய்து பொருத்திக் கொண்டால், அது அந்நபருடைய உடல் நிலை பற்றிய தகவலை இணையத்திலேயேகூட பரிமாறுமாம்.
0 comments:
Post a Comment