>> Tuesday, September 28, 2010
போட்டியை ஆரம்பித்து வைப்பது யார்?
போட்டிகளுக்கான சின்னம்
இந்தியத் தலைநகர் டில்லியில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை யார் தொடக்கி வைப்பது என்பது குறித்து இப்போது ஒரு புதிய சர்ச்சை விளையாட்டு வட்டாரங்களில் உருவாகியுள்ளது.
இப்போட்டிகளை யார் ஆரம்பித்து வைப்பது என்பது குறித்து இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை என்று இந்திய குடியரசுத்தலைவரின் அலுவலகம் கூறியுள்ளது.
ஆனால், இங்கே, லண்டனில் இளவரசர் சார்ள்ஸின் அலுவலகமோ, ''பிரிட்டிஷ் இராணியின் பிரதிநிதி என்ற வகையில் இளவரசரே விளையாட்டுப் போட்டிகளை ஆரம்பித்துவைப்பார்'' என்று கூறுகிறது.
பிரதீபா பாட்டில்
காமன்வெல்த் நாடுகளின் தலைவி என்ற வகையில் வழமையாக இராணியார்தான் விளையாட்டுப் போட்டியை ஆரம்பித்து வைப்பது வழக்கம். ஆனால், அவர் இந்த வருடம் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத அளவுக்கு மிகவும் வேலைப்பழுவுடன் இருப்பதாக பங்கிங்ஹாம் மாளிகை கூறுகிறது.
டில்லி விளையாட்டு போட்டிகளின் ஏற்பாட்டாளர்களோ இந்திய குடியரசுத் தலைவர்தான் விளையாட்டுப் போட்டியை ஆரம்பித்து வைக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
இராஜதந்திர நெறிமுறைகளின்படி இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில்தான் நிகழ்வை ஆரம்பித்து வைக்க வேண்டும் என்று பெயரை வெளியிடாத ஒரு இந்திய அரசாங்க அதிகாரியை ஆதாரம் காட்டி செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், அப்படியான முடிவு எதுவும் இன்னமும் எடுக்கப்படவில்லை என்று இந்திய குடியரசுத் தலைவரின், செயலரான அர்ச்சனா தத்தா திங்களன்று கூறியுள்ளார்.
இராணியாரும், இளவரசர் சார்ள்ஸும்
ஆனால், இளவரசர் சார்ள்சின் அலுவலகமான கிளரன்ஸ் ஹவுஸ், ''இது ஒரு பிரச்சினையே அல்ல, ஆரம்ப வைபவத்தில் இளவசரரும், இந்திய குடியரசுத் தலைவரும் முக்கிய பங்கெடுப்பார்கள்'' என்று கூறியுள்ளது.
விளையாட்டுப் போட்டிகளில் தனது பிரதிநிதியாக கலந்துகொள்ளுமாறு இளவரசரை, எலிசபெத் இராணியார் கேட்டுக்கொண்டுள்ளார்.
அங்கு நிகழ்வெல்லாம் எப்படி நடக்கும் என்பதை நாம் முற்றாக நிர்ணயிக்க முடியாவிட்டாலும், விளையாட்டு ஜோதிக்கான இராணியின் செய்தியை இளவரசர் படித்து, இறுதியில், போட்டிகள் ஆரம்பமாவதாக அறிவிப்பார்.
பக்கிங்ஹாம் மாளிகைக்கு வெளியே கடந்த ஒக்டோபரில் ஒரு நிகழ்வில், பிரதீபா பாட்டிலும், இராணியாரும் இணைந்து விளையாட்டு ஜோதியை ஏற்றிவைத்தார்கள்.
காமன்வெல்த் நாடுகளெங்கும் இந்த ஜோதி பயணித்து ஆரம்பவைபவத்துக்காக ஞாயிறன்று டில்லி சென்றடையும்.
0 comments:
Post a Comment