>> Thursday, September 16, 2010




காஷ்மீர் செல்கிறது அனைத்துக் கட்சிக்குழு


காஷ்மீரில் பதற்ற நிலை நீடிக்கிறது
இந்தியாவின் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதிக்கு அனைத்துக் கட்சி குழுவை அனுப்புவதற்கு இந்தியாவின் மத்திய அரசு முடிவேடுத்துள்ளது.
அங்கு தற்போது நிலவும் கள நிலமையை ஆராயும் விதமாகவே அனைத்துக் கட்சிக் குழுவினர் காஷ்மீர் பகுதிக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்திய உள்துறை அமைச்சகமும் ஜம்மு காஷ்மீர் மாநில அரசும் இதற்கான ஏற்பாடுகளை செய்யும்.

கடந்த சில வாரங்களாக ஜம்மு காஷ்மீர் பகுதியில், பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதி வருகின்றனர்.


காஷ்மீரில் பதற்ற நிலை தொடருகிறது



இந்த மோதல்கள் காரணமாக கடந்த மூன்று மாதங்களில் எண்பது பேருக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மாநிலத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் நிலவி வரும் பதற்ற நிலையை முடிவுக்கு கொண்டு வரும் முகமாக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் புதுடில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஆளும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சி, பிரதான எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சி, இடது சாரிகள் மற்றும் காஷ்மீரில் ஆட்சியில் இருக்கும் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் எதிர்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி உட்பட பல கட்சிகள் பங்கு பெற்றன.

காஷ்மீருக்கு அனைத்துக் கட்சி குழுவினர் செல்ல இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டாலும், ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கும் சட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்வது தொடர்பாகவோ அதை தளர்த்துவது தொடர்பாகவோ முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை.

இந்தியாவின் அரசியல் அமைப்புக்கு உட்பட்டு உள்ளக பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும் என்பதில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து நிலவியது.

வன்முறை முடிவுக்கு வந்த பிறகே பேச்சுவார்த்தைகள்

இந்தக் கூட்டத்தில் அந்த மாநிலத்தில் தொடரும் வன்முறைகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் அவர்களும் மற்ற தலைவர்களும் வேதனையும் கவலையும் வெளியிட்டனர்.


வன்முறையில் ஈடுபடும் மக்கள்



ஜம்மு காஷ்மீர் பகுதியில் அமைதியை ஏற்படுத்த எந்த தனி நபரிடமோ அல்லது எந்தக் குழுவுடனுமோ தாங்கள் பேச்சுவார்த்தைகள் நடத்த தயாராக உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்த அதே வேளை, அதற்கு முன்னர் வன்முறை முடிவுக்கு வரவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

காஷ்மீருக்கான விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ள அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் அங்கு சமூகத்தின் பல மட்டங்களில் உள்ள மக்களையும் சந்தித்து உரையாடி கருத்துக்களை பெறவுள்ளனர்.

மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் தேசிய மாநாட்டுக் கட்சியும், எதிர்கட்சியாக இருக்கும் மக்கள் ஜனநாயக கட்சியும் ஆயுதப் படைகளுக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்த போதிலும் அதற்கு கடும் எதிர்ப்பு இருந்தது.

பாரதீய ஜனதா கட்சி, ஷிவ் சேனா, சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் போன்ற கட்சிகள் அதை கடுமையாக எதிர்த்தன. அப்படியான ஒரு நடவடிக்கை பாதுகாப்பு படையினரின் மனோ நிலையை பாதித்து ஊக்கமிழக்கச் செய்துவிடும் என இந்தக் கட்சிகள் வாதிட்டன.

இந்தக் கருத்துக்கு இடதுசாரிகளும் ஆதரவு தெரிவித்தன.

அனைத்துக் கட்சி குழுவினரின் காஷ்மீர் பகுதிக்கான விஜயத்துகான தேதி இன்னமும் முடிவு செய்யப்படவில்லை

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter