>> Monday, September 20, 2010


கிளிநொச்சி மக்கள் சாட்சியமளித்தனர்


கிளிநொச்சி மக்கள்
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டம்-கண்டாவளை பிரதேச செயலகத்தில் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இரண்டாவது நாளாக விசாரணைகளை நடத்தியது.
ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த பெரும் எண்ணிக்கையிலான பெண்கள், தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது பிள்ளைகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் காணாமல் போயுள்ளவர்களைக் கண்டுபிடித்துத் தரவேண்டும் என்றும் கோரினர்.

இங்கு சாட்சியமளித்த 58 வயதான கந்தசாமி பொன்னம்மா என்ற தாய்,
இறுதிப் போரின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினராகிய தனது மருமகனும் தனது மகளும் அவர்களது இரண்டு குழந்தைகளும் காணாமல் போயுள்ளதாக பிபிசியிடம் கூறினார்.

அத்துடன் மல்லாவி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் பணியாற்றிய தனது மகன் ஒருவர், 2006 ஆம் ஆண்டில் வவுனியாவுக்குச் சென்றிருந்த போது காணாமல் போனதாகவும் அந்த தாய் தெரிவித்தார்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கண்டாவளையைச் சேர்ந்த காசிப்பிள்ளை பாலேஸ்வரன் என்பவர் ஆணைக்குழுவினரிடம் வலியுறுத்தியுள்ளார்.

பார்வை இழந்துள்ள இவர், போரினால் பாதிக்கப்பட்டு, உடல் வலுவிழந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, திங்கட் கிழமை முல்லைத்தீவு நகருக்குச் சென்று அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களின் சாட்சியங்களைப் பதிவு செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter