>> Tuesday, September 7, 2010
கல்வி விசா: பிரிட்டனில் சர்ச்சை
கல்வி கற்பதற்காக பிரிட்டனுக்குள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியிலிருந்து வந்துள்ள வெளிநாட்டு மாணவர்களில் ஐந்தில் ஒரு பங்கு அளவானோர், வந்து ஐந்து வருடங்களாகியும் பிரிட்டனிலேயே தங்கியிருப்பதாக புதிய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
வெளிநாட்டவர்கள் பிரிட்டனுக்குள் வர அனுமதிப்பதில், சாதுரியமான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தப்போவதாக குடிவரவுத்துறை அமைச்சர் டேமியன் கிரீன் கூறுகின்றார்.
ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ், த லண்டன் ஸ்கூல் ஒஃப் எக்கனாமிக்ஸ் போன்ற உலகப் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் காரணமாக நீண்டகாலமாகவே கல்விக்கு பிரசித்தமான இடமாக பிரிட்டன் இருந்துவருகிறது.
2009ம் ஆண்டில், முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் மூன்று மடங்குக்கும் அதிகமான மாணவர் வீசாக்கள் பிரிட்டனில் விநியோகிக்கப்பட்டுள்ளன.
அரசாங்கம் நடத்தியுள்ள புதிய ஆய்வுகளின்படி, பிரிட்டனில் கல்வியை நிறைவு செய்து கொண்டதன் பின்னர், பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் இங்கேயே தங்கிவிடுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2004ம் ஆண்டில், கற்கை நெறிகளை ஆரம்பித்த 185 ஆயிரம் பேரில், ஐந்தில் ஒருவர் என்ற அளவுக்கும் அதிகமானோர் ஐந்து வருடகாலமாக இன்னும் பிரிட்டனிலேயே தங்கியிருக்கின்றனர்.
இந்த எண்ணிக்கையை குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயவுள்ளதாக பிரிட்டனின் குடிவரவுத்துறை அமைச்சர் டேமியன் கிரீன் கூறியுள்ளார்.
பிரிட்டன்வாசிகளில் நாட்டிலிருந்து வெளியேறி்யோரின் எண்ணிக்கை போக இங்கு குடியேறியுள்ளோரின் எண்ணிக்கையின் நிகர அளவைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு எடுத்துள்ள விரிவான திட்டங்களின் ஒரு அங்கமாக இதனை முன்னெடுக்கவுள்ளதாக டேமியன் கிரீன் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment