>> Friday, September 3, 2010



பாக் வீரர்களிடம் விசாரணைகள் தொடருகின்றன


சல்மான் பட்
சர்ச்சையில் சிக்கியுள்ள பாகிஸ்தான் அணியின் தலைவர் சல்மான் பட்
சூதாட்ட விடயங்களில் ஈடுபட்டார்கள் என்கிற குற்றச்சாட்டுகளில் சிக்கியிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மூன்று பேர் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் எஞ்சியிருக்கும் போட்டிகளில் பங்கு பெறமாட்டார்கள் என அந்த அணியின் மேலாளர் யாவார் சயீத் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் பாகிஸ்தான் அணியிலிருந்து இந்த மூன்று பேரும் இடைநீக்கம் செய்யப்பட மாட்டார்கள் எனவும் யாவார் சயீத் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைவரான சல்மான் பட், பந்து வீச்சாளர்கள் முகமது ஆசிஃப் மற்றும் முகமது ஆமிர் ஆகிய மூவரே இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளனர்.

இவர்கள் மூவரும் இன்று(வியாழக்கிழமை) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான இஜாஸ் பட் மற்றும் பிரிட்டனுக்கான பாகிஸ்தான் தூதர் ஆகியோரால் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரத்தில் இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தின் முடிவடைந்த நான்காவது டெஸ்ட் போட்டியில், குறிப்பிட்ட சமயத்தில் "நோ பால்"வீசுவதற்காக, சூதாட்ட தரகர்களுடன் இணைந்து செயற்பட்டனர் என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் நான்கு டெஸ்ட் போட்டிகளும் முடிவுற்றுள்ள நிலையில், பாகிஸ்தான் அணி இரண்டு 20-20 போட்டிகளிலும், ஐந்து ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.

சினிமா வாய்ப்பு பறிபோனது


முகமது ஆசீஃப்
சினிமா வாய்ப்பை இழந்த முகமது ஆசீஃப்
மலையாள திரையுலகில் பிரலமானவரான கதியாபரம் தாமோதரம் நம்பூதிரி எடுக்கவிருந்த படத்திலிருந்து இந்தக் குற்றச்சாட்டுகள் காரணமாக முகமது ஆசீஃப் நீக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தகவலை நம்பூதிரி அவர்கள் பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டின் மூலம் நட்பை வெளிப்படுத்தும் கருவை மையமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்படுகிறது.

இதில் கேரள மாநிலத்தில் நடைபெறும் ஒரு பயிற்சி முகாமில், கிரிக்கெட் பயிற்சியாளர் கதாபாத்திரம் ஒன்றில் முகமது ஆசீஃப் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் இந்த கதாபாத்திரத்துக்கு முகமது ஆசீஃப் ஒப்பந்தம் செய்யப்பட்டிருதார்.

இந்த வேடத்தில் நடிக்க முதலில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரான வாசிம் அக்ரமை அணுகியதாகவும், ஆனால் அவர் அதற்கு மறுத்து விட்டதாகவும் நம்பூதிரி தெரிவித்துள்ளார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter