>> Tuesday, September 28, 2010
புலிகள் தடுப்பு: ஐ.சி.ஜே கவலை
விடுதலைப்புலிகள்
ஜெனீவாவிலிருந்து இயங்கும், சர்வதேச நீதித்துறை வல்லுநர்கள் ஆணையம், ஐ.சி.ஜே, இலங்கையில் முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்ற முறை சர்வதேச சட்டம் மற்றும் தரவுகளை ஒத்திருக்கவில்லை என்று கவலை வெளியிட்டிருக்கிறது.
இலங்கை அரசு கடந்த ஆண்டு போர் முடிவடைந்த காலகட்டத்தில் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகளில் இன்னும் சுமார் 8,000 பேர் வரை தடுத்துவைத்திருக்கின்றது.
இந்தத் தடுப்பு முகாம்களை உலகிலேயே பெரிய அளவிலான, நிர்வாகமே செய்யும் தடுப்புக்காவல் என்று வர்ணிக்கும் இந்த அமைப்பு, இந்தth தடுப்புக்காவல் சுதந்திரத்துக்கான உரிமை, நியாமான விசாரணைக்கான மற்றும் நியாயமான சட்டரீதியான வழிமுறையை அவர்களுக்கு வழங்குவது போன்றவைகளையும் மறுக்கிறது என்று கூறியுள்ளது.
''போர் முடிந்த நிலையில், களத்தில் இருக்கும் நிலைமைகள் நாட்டின் இருப்புக்கு ஒரு அச்சுறுத்தலைத் தருவதாக கருதமுடியாது; எனவே இலங்கையில் அவசரநிலையை இன்னும் அமலில் வைத்திருப்பதை சர்வதேச அளவுகோல்களின்படி நியாயப்படுத்த முடியாது'' என்றும் அது குறிப்பிடுகிறது.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இந்த முன்னாள் போராளிகளும், சரணடைந்தவர்களும், ஒரு சட்டரீதியான கருஞ்சூன்யத்தை எதிர்நோக்குவதாகக் கூறும் இந்த அமைப்பு, இந்தப் புனர்வாழ்வு முயற்சிகளுக்கான சர்வதேச உதவி, இந்த நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்கள் மற்றும் தரவுகளின்படியே எடுக்கப்படவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே தரப்படவேண்டும் என்று கூறுகிறது.
இவ்வாறு எந்த நிபந்தனைகளும் இல்லாமல் சர்வதேச உதவி தரப்பட்டால், அது நியாயமற்ற தடுப்பு நடவடிக்கைகளில் சர்வதேச சமூகமும் ஒத்திசைவாகச் செல்லும் ஆபத்தை ஏற்பduத்தும் என்று இந்த அமைப்பு கூறுகிறது.
இலங்கையில் இவ்வாறான தடுப்புக்காவல் கைதுகள், அவசரகாலச் சட்ட விதிகளின் கீழும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழும் செய்யப்படுவதை சுட்டிக்காட்டும் இந்த அமைப்பு, இந்த சட்டங்களின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலி போராளிகள், புனர்வாழ்வு நடவடிக்கைகள் என்ற பெயரில், இரண்டு ஆண்டுகள் வரை எந்த ஒரு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படாமல், நிர்வாகத்தால் தடுத்துவைக்கப்படுவது, அவர்களுக்கு தனிப்பட்ட முறையிலோ அல்லது கூட்டாகவோ விதிக்கப்படும் , விசாரணையில்லாத தண்டனை என்றும் வர்ணிக்கிறது.
அவர்கள் செய்ததாகக் கூறப்படும் இந்தக் கிரிமினல் குற்றங்களுக்காக இவ்வாறு மறைமுகமாக விதிக்கபபடும் தடுப்புக்காவல் தண்டனையைத் தவிர, விசாரணைகள் மற்றும் கிரிமினல் குற்றச்சாட்டுகள் தொடங்கப்பட்டால் அவர்களுக்கு இரண்டாவது முறையும் மற்றுமொரு தண்டனையும் கிடைக்கக்கூடிய சாத்தியக்கூறை அவர்கள் எதிர்நோக்குகிறார்கள் என்று இந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.
பரிந்துரைகள்
இலங்கை அரசு அவசரகால சட்டங்களை முடிவுக்கு கொண்டுவருவது, புனர்வாழ்வுக்கான விதிமுறைகளை வகுப்பது, சண்டையில் ஈடுபட்டவர்களை முறையாக குற்றம்சாட்டி வழக்குத் தொடுப்பது அல்லது அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது, பயங்கரவாதத் தடுப்பு சட்டங்களை மறு பரிசீலனை செய்து, அதில் சர்வதேச சட்டத்துக்கு ஒவ்வாத பிரிவுகளை சீர்திருத்துவது அல்லது விலக்கிக்கொள்வது ஆகியவைகளைச் செய்யவேண்டும் என்று இந்த அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
மேலும் சிறார்கள் இந்த தடுப்புக்காவல் முகாம்களில் தடுத்துவைக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்யவேண்டும் என்றும் அது கோரியிருக்கிறது.
ஐ.நா மன்றமும், இலங்கைக்கு நிதி உதவி வழங்கும் நாடுகளும், இந்த விடயத்தில், சர்வதேச சட்டம் மற்றும் தரவுகளை ஒத்த இலங்கைக்கான சட்ட வடிவமைப்பு ஒன்றை உருவாக்க தொழில் நுட்ப உதவியை வழங்க வேண்டும், ஐ.நா மன்றம் இந்தச் சட்ட வடிவமைப்பு ஏற்படுத்தப்படும் வரை, இந்த முகாம்களுக்குள், இலங்கை அரசின் எந்த ஒரு நடவடிக்கையையும், ஆதரிக்கக் கூடாது என்றும் இந்த அமைப்பு கூறியிருக்கிறது.
0 comments:
Post a Comment