>> Friday, September 24, 2010
காமன்வெல்த்: தொடரும் குளறுபடிகள்
விளையாட்டு வீரர்களுக்கான குளியலறை
இந்தியாவில் வரும் அக்டோபர் மூன்றாம் தேதி துவங்கும் காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தொடர்பான குளறுபடிகள் தொடர்ந்து நீடிக்கின்றன. இறுதி நேர சிக்கல்களுக்குத் தீ்ர்வு காண, பிரதமர் மன்மோகன் சிங், முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், 71 நாடுகளில் இருந்து கலந்துகொள்ளவிருக்கும் நிலையில், போட்டி ஏற்பாடுகள் தொடர்பில், குறிப்பாக வீரர்கள் தங்கவிருக்கும் குடியிருப்புக்கள் இன்னும் முழுமையாகத் தயாராகாமல் சுகாதாரமற்ற நிலையில் இருப்பது குறித்து காமன்வெல்த் சம்மேளனம் கடும் ஏமாற்றமடைந்துள்ளது.
அந்த குடியிருப்புக்களில் பிபிசி எடுத்த புகைப்படங்களில், குளியலறைகள், கழிவறைகள் மிக மோசமான நிலையில் உள்ளதைக் காண முடிகிறது. படிக்கட்டுகளில் கூட எச்சில்கள் துப்பப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. வீரர்கள் உறங்கும் படுக்கைகளில், நாய்களின் கால் தடங்கள் தெளிவாகப் பதி்ந்துள்ளன.
விளையாட்டு வீரர்களுக்கான படுக்கையில் நாய்களின் கால்தடங்கள்
உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசை வலியுறுத்தியுள்ள சம்மேளனத் தலைவர் மைக் ஃபெனல், வியாழக்கிழமை மாலை டெல்லி வந்து சேர்ந்தார். இந்தப் போட்டிகள் இந்தியாவுக்கு அவமானத்தைத் தேடித் தரும் நிலை ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் கடுமையாக விமர்சிக்கும் நிலையில், மத்திய அரசும், டெல்லி மாநில அரசும் குடியிருப்பு்க்களைத் தூய்மைப்படுத்துவதற்கு துரித நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
நியுஸிலாந்து, கனடா, ஸ்காட்லாந்து, மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தங்கள் வருகைகளைத் தாமதப்படுத்தியுள்ளன. தூய்மை மற்றும் சுகாதாரம் உறுதிப்படுத்தப்படும் வரை தாங்கள் காத்திரு்கக முடிவு செய்துள்ளதாக அந்த அணிகள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, அடுத்த 48 மணி நேரத்தில் எல்லாப் பணிகளும் சிறப்பாக முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதனிடையே, வரும் சனிக்கிழமை காலைக்குள் விளையாட்டு அரங்கங்கள், வீரர்களின் குடியிருப்புக்கள் உள்பட அனைத்து இடங்களிலும் பணிகளை முடித்து, உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்குமாறு போட்டி ஏற்பாட்டுக் குழுவினருக்கு உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் உத்தரவிட்டுள்ளார். அப்போதுதான், முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய முடியும் என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment