>> Thursday, September 2, 2010


இந்தியாவின் தேசிய விலங்காக புலி உள்ள நிலையில், யானையை இந்தியாவின் பாரம்பரிய விலங்கினமாக விரைவில் அறிவிக்கப்பட உள்ளது

இந்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

புலிகளைப் பாதுகாக்க தேசிய புலிகள் பாதுகாப்பு அமைப்பு உள்ளதைப் போல, யானைகளைப் பாதுகாப்பதற்கும் தேசிய யானைகள் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்படும் என்றும், அதற்காக வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார்.

யானைகளைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, சுற்றுச்சூழல் நிபுணர் மகேஷ் ரங்கராஜன் தலைமையில் கடந்த பிப்ரவரி மாதம் 12 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்தது.

அந்தக் குழு நேற்று அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில்தான் இந்த முடிவுகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

மகேஷ் ரங்கராஜன் பேட்டி

புலிகளை உரிய நேரத்தில் பாதுகாக்கத் தவறியதால்தான் தற்போது புலிகளின் எண்ணிக்கை மிகமிகக் குறைந்துவிட்டதாகக் கூறும் மகேஷ் ரங்கராஜன், அதே நிலை யானைகளுக்கும் வந்துவிடாமல் தடுக்க வேண்டியது அவசியம் என்று கூறுகிறார். இந்தியாவில் தற்போது சுமார் 25 ஆயிரம் யானைகள் உள்ள நிலையில், அதில் 3500 யானைகள், விலங்கியல் பூங்காக்கள், கோயில்கள் உள்ளிட்ட இடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக உயர்நிலைக்குழு கூறுகிறது.

மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையில் நடக்கும் மோதல்கள் காரணமாக மட்டும் ஆண்டுக்கு சுமார் 400 பேர் உயிரிழப்பதாக உயர்நிலைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. அதனால், மனிதர்கள் மற்றும் யானைகளுக்கிடையிலான மோதலைத் தடுக்க அரசுக்கு பல யோசனைகளை அந்தக் குழு அளித்திருக்கிறது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter