>> Friday, September 3, 2010
கடத்தப்பட்ட பிகார் காவலர் கொலையா?
பிகார் மாநிலத்தில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு கடத்திச் செல்லப்பட்ட நான்கு காவலர்களில், ஒருவரை வியாழக்கிழமை கொன்றுவிட்டதாக மாவோயிஸ்டுகள் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், இதுவரை காவல்துறை தரப்பில் அந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
சிறையில் உள்ள மாவோயிஸ்டுகள் எட்டுப்பேரை விடுவித்தால்தான், கடத்தப்பட்ட காவலர்களை விடுதலை செய்வோம் என்று அறிவித்த மாவோயிஸ்டுகள், அதற்குக் காலக்கெடுவும் விதித்திருந்தார்கள்.
இந்த நிலையில், வியாழனன்று பிகார் தலைநகர் பட்னாவில் உள்ள பிடிஐ செய்தி நிறுவனத்துக்குத் தொடர்புகொண்டு பேசிய அவிநாஷ் என்பவர், தான் மாவோயிஸ்டுகள் தரப்பில் பேசுவதாகவும், அரசுக்கு தாங்கள் விதித்திருந்த காலக்கெடு முடிவடைந்துவிட்ட நிலையில், கடத்தப்பட்ட நான்கு காவலர்களில், ஒருவரை தாங்கள் கொன்றுவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.
மாவோயிஸ்டுகளின் பிடியில் காவலர்
தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற அரசு தவறினால், மீதமுள்ள மூன்று காவலரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குப் பிறகு கொல்லப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.
ஆனால், கடத்தப்பட்ட காவலர்களில் ஒருவரை மாவோயிஸ்டுகள் கொன்றுவிட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று மாநில காவல்துறைத் தலைவர் நீல்மணி தெரிவித்துள்ளார்.
கடத்தப்பட்ட காவலர்களை கண்டுபிடிக்க பெரிய அளவில் தேடுதல் வேட்டை நடந்து வருவதாக காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார். ஆனால், மாவோயிஸ்டுகளுடன் காவல்துறையின் சார்பிலோ, அரசுத் தரப்பிலிருந்தோ எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று அவர் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, லக்கிசராய் மாவட்டத்தில் கஜ்ரா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில், போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த கடும் மோதலில், எட்டு காவலர்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது, நான்கு காவலர்களை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றுவிட்டார்கள்.
இதனிடையே, டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறைச் செயலர் ஜி.கே. பிள்ளை, மாவோயிஸ்டுகளுடன் மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், நல்ல முடிவு கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இந்தப் பிரச்சினையில், மாநில அரசுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் உள்துறைச் செயலர் ஜி.கே. பிள்ளை தெரிவி்ததார்.
0 comments:
Post a Comment