>> Thursday, June 17, 2010
போரில் சேதமடைந்த முள்ளிவாய்க்கால் மருத்துவமனை
பிர்ட்டன் அமைச்சர் அலிஸ்டர் பர்ட்
சுயாதீன விசாரணைக்கு ஆதரவில்லை
இலங்கை அரசு போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாக ஐ.நா மன்ற பொதுச்செயலருக்கு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என்று தெற்காசிய விவாகாரங்களுக்கான பிரிட்டிஷ் பிரதி அமைச்சர் அலிஸ்டர் பர்ட் தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் இலங்கை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக்குழு விவாதம் நடைபெற்ற போதே இந்தக் கருத்தை அவர் வெளியிட்டார்.
அதே நேரம் இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் குறித்த சுயாதீன விசாரணை நடைபெற வேண்டும் என்று எழும் கோரிக்கைகளை அவர் நேரடியாக ஆதரிக்கவில்லை.
விவாதத்தைத் துவக்கி வைத்து பேசிய தொழிற்கட்சி உறுப்பினர் சியோபன் மிக் டொனால்ட் அவர்கள், சமீபத்தில் வெளியிடப்பட்ட சர்வதேச நெருக்கடிக்கான குழுவின் அறிக்கையில் கூறப்பட்டிருந்த விடயங்களையும், சேனல் 4 இல் வெளியிடப்பட்ட வீடியோக்கள் போன்றவற்றை ஆதராம் காட்டிப் பேசினார். போர் குற்றங்கள் குறித்த ஒரு சுயாதீன சர்வதேச விசாரணை வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஆனால் போர் குற்றங்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டியதன் முதல் கடமை இலங்கை அரசுடையது என்று சர்வதேச சட்டம் கூறும் நிலையில் இது தொடர்பில் ஒரு விசாரணையை இலங்கை மீது திணிக்க முடியாது என்று அமைச்சர் அலஸ்டர் பர்ட் தெரிவித்தார்.
மேலும் போர் குற்றங்கள் தொடர்பாக அனைத்து தரப்புக்கும் எதிராக புகார் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த விவாதத்தில் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தொழிற்கட்சியைச் சேர்ந்த கீத் வாஸ் அவர்கள், இலங்கை அரசாங்கம் யுத்த குற்றங்கள் குறித்த சாட்சியங்களை அழிக்கும் பணியைச் செய்ய ஒரு சீன நிறுவத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக ஊடக தகவல்கள் மூலம் தான் அறிந்ததாக கூறினார்.
தென் ஆப்பிரிக்க அரசின் இன வெறிக் கொள்கையை எதிர்க்கும் விதமாக அந்நாட்டுப் பொருட்களை புறக்கணித்தது போல இலங்கைப் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.
0 comments:
Post a Comment