>> Thursday, June 3, 2010
நவி பிள்ளைக்கு இலங்கை அரசு கண்டனம்
போர் குற்றங்கள் குறித்து சமீபத்தில் பல புதிய ஆதாரங்கள் வெளிவந்துள்ளன
இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் ஒரு சர்வதேச விசாரணை வேண்டும் என்று ஐ நாவின் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவி பிள்ளை கூறிய கருத்துக்களுக்கு இலங்கை அரசு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்ட இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ், "இது ஒரு நியாயமற்ற நடவடிக்கை என்றே நாங்கள் நினைக்கிறோம். இது ஒரு அடக்குமுறை கொண்ட நடவடிக்கையும் கூட. இலங்கையை துன்புறுத்துவதில் வெற்றிகாணும் வரை சிலருக்கு ஒய்வு கிட்டாது போல் இருக்கிறது" என்று சாடியுள்ளார்.
கடந்த ஆண்டு போரின் இறுதி கட்டத்தின் போது மக்கள் மீது இரு தரப்பும் வேண்டுமென்றே தாக்குதல் நடத்தின அல்லது வகை தொகையற்ற தாக்குதல்களில் மக்கள் சிக்கியது போன்ற செயல்கள் நடைபெற்றுள்ளன. இது குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் என்று மேற்கத்திய நாடுகளும் மனித உரிமை அமைப்புக்களும் கோருகின்றன.
போர்க் குற்றங்கள் பற்றிக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை இலங்கை தொடர்ந்து மறுத்து வருகறது. விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள் பலர் கொல்லப்பட்ட நிலையில் போர் குற்ற விசாரணை என்று வந்தால் அது அரச தரப்பின் செயல்பாடுகளை ஆய்வதாக இருக்கும் என்பதால் இது போன்ற கோரி்க்கைகள் இலங்கைக்கு ஆத்திரத்தை தருவதாக உள்ளன.
"நவி பிள்ளையைப் போன்ற சிலர் இலங்கையை விடாப்பிடியாக இம்சைப்படுத்துகின்றனர்" என்கிறார் அமைச்சர் பீரிஸ்.
இலங்கை அரசு படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தை உருவாக்கியுள்ளது என்றாலும் இலங்கை நிலவரம் குறித்து சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டும் என்று திங்கள் கிழமையன்று ஐ நாவின் மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பேசியபோது நவி பிள்ளை தெரிவித்திருந்தார்.
அதேநேரம் இலங்கை ஆணையத்துக்கு தனது ஆதரவை வழங்கியுள்ள அமெரிக்க அரசுத் துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன், இந்த ஆணையம் போர் குற்றங்கள் குறித்த புகார்களையும் ஆராய வேண்டும் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment